Enable Javscript for better performance
கும்கி யானைகளுடன் ஒற்றை யானை கடும் மோதல்- Dinamani

சுடச்சுட

    

    ஒசூர் தனியார் தொழில்சாலை பின்புறமுள்ள தோட்டத்தில் சுற்றித் திரியும் ஒற்றை யானை கும்கி யானைகளுடன் வெள்ளிக்கிழமை நேருக்குநேர் மோதியது. இதில் கும்கி யானைகள் பின்வாங்கியதையடுத்து, ஒற்றை யானை அங்கிருந்து தப்பியது.

    கர்நாடக மாநிலத்திலிருந்து கிருஷ்ணகிரி வனப் பகுதிக்கு வந்த யானைகள் கூட்டத்திலிருந்து பிரிந்த ஒற்றை யானை ஒசூர் அசோக் லேலண்ட் தொழில்சாலையின் பின்புறமுள்ள தோட்டத்தில் புகுந்தது.

    அங்கு கடந்த 19 நாள்களாக சுற்றித் திரியும் அந்த யானையை விரட்ட ஒசூர் கோட்ட வனத் துறையினர் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காததால், கோவை மாவட்டத்திலிருந்து 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன.

    இதையடுத்து, புதன்கிழமை முதல் கும்கி யானைகளைக் கொண்டு ஒற்றை யானையை விரட்டும் பணியில் வனத் துறையினர் ஈடுபட்டனர். முதல் நாளிலேயே கும்கி யானைகளுக்கு ஒற்றை யானை போக்கு காட்டியது.

    அடர்ந்த புதர்களுக்குள் சென்று மறைந்து கொண்ட ஒற்றை யானை, வெளியே வராமல் அங்கும் இங்கும் ஓடி மறைந்தது.

    இரண்டாம் நாளான வியாழக்கிழமையும் கும்கி யானைகளால் ஒற்றை யானையை நெருங்க முடியாததால், மயக்க மருந்து ஊசியை செலுத்தி ஒற்றை யானையைப் பிடிக்க வனத் துறையினர் முடிவு செய்தனர். இதுதொடர்பாக, உயர் அதிகாரிகளின் அனுமதி கேட்டு பேக்ஸ் அனுப்பப்பட்டது.

    இதைத்தொடர்ந்து, வியாழக்கிழமை நள்ளிரவில் தொழில்சாலை வளாகத்தில் கும்கி யானைகள் கட்டப்பட்டிருந்த பகுதிக்கு வந்த ஒற்றை யானை ஆக்ரோஷமாக பிளிறியபடி கும்கி யானைகளை விரட்டியது.

    அங்கு கும்கி யானைகளுடன் அவற்றின் பாகன்கள் மட்டுமே தங்கியிருந்தனர். இதையடுத்து, டார்ச் லைட் வெளிச்சத்தை கொண்டு ஒற்றை யானையை அங்கிருந்து பாகன்கள் விரட்டினர்.

    அப்போது, தொழில்சாலையின் வடக்குப் பகுதியிலுள்ள இரும்பு வேலியை உடைத்துக் கொண்டு வெளியேறிய யானை, அங்கிருந்த தக்காளித் தோட்டத்துக்குள் புகுந்து நாசம் செய்தது. பின்னர், தொழில்சாலை வளாகத்துக்குள் மீண்டும் வந்தது.

    இந்த நிலையில், ஒற்றை யானைக்கு மயக்க மருந்து ஊசி செலுத்த வெள்ளிக்கிழமை அனுமதி கிடைத்ததையடுத்து, அதற்கான நடவடிக்கையில் வனத் துறையில் ஈடுபட்டனர்.

    கால்நடை மருத்துவர் மனோகரன் ஒற்றை யானை பதுங்கியிருந்து முள்புதர் பகுதிக்கு மாலை 6.30 மணிக்கு சென்றார். .302 ரக துப்பாக்கி மூலம் மயக்க மருந்து கலந்து ஊசி ஒற்றை யானையின் மீது செலுத்தப்பட்டது.

    சுமார் ஒரு மணி நேரம் அந்த யானைக்கு மயக்கம் ஏற்படவில்லை. இரவு 7.30 மணியளவில் ஒற்றை யானைக்கு மயக்கம் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து, கும்கி யானைகள் வரவழைத்து ஒற்றை யானையை லாரியில் ஏற்றும் நடவடிக்கையில் வனத் துறையினர் ஈடுபட்டனர்.சுமார் ஒரு மணி நேரமான நிலையில், ஒற்றை யானை மயக்கம் தெளிந்து கண் விழித்தது. கும்கி யானைகள், வனத் துறையினரைக் கண்ட அந்த யானை, அவர்களைத் தாக்க முற்பட்டது.

    உடனே 3 கும்கிகளும் சேர்ந்து ஒற்றை யானையை அடக்கும் முயற்சியில் ஈடுபட்டன. ஆனால், ஒற்றை யானை கும்கி யானைகளுடன் நேருக்குநேர் சண்டையிடத் தொடங்கியது. சுமார் 20 நிமிஷங்களுக்கு மேலாக நீடித்த இந்த மோதலில், ஒற்றை யானை தனித்து நின்று கும்கி யானைகளை நிலைகுலையச் செய்தது. இந்த மோதல் தொடர்ந்தால், கும்கி யானைகளுக்கு ஏதேனும் பாதிப்பு நேரிடலாம் எனக் கருதிய பாகன்கள், கும்கி யானைகளைப் படிப்படியாக பின்வாங்க வைத்தனர்.

    அந்த நேரத்தில் அங்கிருந்து ஒற்றை யானை தப்பியோடியது. தற்போது அந்த யானை எங்குள்ளது என்பது தெரியவில்லை. வனத் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai