Enable Javscript for better performance
பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 3 பேர் பணியிடை நீக்கம்- Dinamani

சுடச்சுட

    

    பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 3 பேர் பணியிடை நீக்கம்

    By கிருஷ்ணகிரி  |   Published on : 27th July 2013 04:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில்  முறைகேட்டில் ஈடுபட்டதாக 3 பேரை தற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்ட நிர்வாகம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

    பர்கூர் ஒன்றியத்திற்கு உள்பட்ட சத்துணவுத்திட்ட பணியாளர்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2012-ஆம் ஆண்டு சத்துணவு திட்டப் பணியாளர்களுக்கு தமிழக அரசு அகவிலைப்படி மற்றும் இதர படிகளை உயர்த்தியது.

    இதையடுத்து இதற்கான நிலுவை தொகை அண்மையில் பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வழங்கப்பட்டது.

    இதில், காசாளர் திருப்பதி, சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கு நிலுவை தொகையை வழங்கும் போது குறிப்பிட்டத் தொகையை சட்ட விரோதமாக பிடித்தம் செய்து கொண்டு மீதி தொகையை வழங்குவதாக ஊழல் தடுப்புப்பிரிவு போலீஸாருக்கு புகார் வந்தது.

    புகாரின் அடிப்படையில் கிருஷ்ணகிரி ஊழல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி ஞானசேகரன் தலைமையில் போலீஸார், பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கடந்த திங்கள்கிழமை சோதனை நடத்தினர். சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக இந்த சோதனை நடத்து. இதில் காசாளர் திருப்பதியிடம் இருந்து கணக்கில் வராத ரூ.49 ஆயிரத்து 118 ரொக்கப்பணமும், முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புதுறையினர் தெரிவித்தனர்.

    மேலும் இது தொடர்பாக காசாளர் திருப்பதி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும் என்று ஊழல் தடுப்புப்பிரிவு போலீஸார் தெரிவித்திருந்தனர்.

    இந்த நிலையில், முறைகேடு தொடர்பாக பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலக காசாளர் திருப்பதி, சத்துணவு பிரிவு மேலாளர் பிரபாகரன், பதிவு எழுத்தர் திப்பண்ணன் ஆகிய 3 பேரை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai