Enable Javscript for better performance
கும்கிகளுக்கே கட்டுப்படாத ஒற்றை யானை சிக்கியது - Dinamani

சுடச்சுட

    

    : கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் தனியார் தொழில்சாலையின் தோட்டத்தில் சுற்றித் திரிந்த ஒற்றை யானையை வனத் துறையினர் மயக்க மருந்து ஊசியை செலுத்தி பிடித்தனர்.

    கர்நாடக வனப் பகுதியிலிருந்து வந்த யானைகள் கூட்டத்திலிருந்து பிரிந்த ஒற்றை யானை ஓசூர் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் பின்புறமுள்ள தோட்டத்தில் புகுந்தது. கடந்த 20 நாளாக அங்கு சுற்றித் திரிந்த யானையைப் பிடிக்க 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன.

    கும்கி யானைகளுக்கு போக்கு காட்டிய ஒற்றை யானையை மயக்க மருந்து ஊசியை செலுத்தி பிடிக்க வனத் துறையினர் முடிவெடுத்தனர். அதன்படி, வெள்ளிக்கிழமை மாலை ஒற்றை யானைக்கு மயக்க மருந்து ஊசி செலுத்தப்பட்டது. பின்னர், கும்கி யானைகளைக் கொண்டு ஒற்றை யானையை லாரியில் ஏற்ற தாமதம் ஏற்பட்டதையடுத்து, மயக்கம் தெளிந்த ஒற்றை யானை கும்கி யானைகளுடன் நேருக்குநேர் மோதலில் ஈடுபட்டது. இதில் கும்கி யானைகளை பாகன்கள் பின்வாங்க வைக்கவே, அந்த நேரத்தில் ஒற்றை யானை புதருக்குள் ஓடி மறைந்தது.

    இதைத் தொடர்ந்து, ஒற்றை யானைக்கு மீண்டும் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் முயற்சியில் வனத் துறையினர் சனிக்கிழமை ஈடுபட்டனர். புதருக்குள் மறைந்திருந்த ஒற்றை யானையை கண்ட வனத் துறையினர், அதன் மீது மயக்க மருந்து ஊசியை துப்பாக்கி மூலம் செலுத்தினர்.

     பின்னர், சிறிது நேர இடைவெளியில் மற்றொரு ஊசியும் ஒற்றை யானை மீது செலுத்தப்பட்டது. இதையடுத்து, மயங்கி சரிந்த ஒற்றை யானையை வனத் துறையினர் லாரியில் ஏற்றும் பணியில் ஈடுபட்டனர். ஜேசிபி இயந்திரம் மூலம் லாரியில் யானை ஏற்றப்பட்டது. பின்னர், பாதுகாப்பாக ஜவளகிரி காட்டுக்குக் கொண்டு சென்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai