சுடச்சுட

  

  வனச் சுழற்சிக்கு சவால் விடும் களைச் செடிகள்

  By கிருஷ்ணகிரி  |   Published on : 02nd November 2013 04:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கிருஷ்ணகிரி மாவட்ட வனப் பகுதிகளில் ஆக்கிரமித்துள்ள களைச் செடிகளால் வனச் சுழற்சிப் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

  கிருஷ்ணகிரி மாவட்டம் வனப் பகுதிகளால் சூழப்பட்டது. மொத்த பரப்பில் 29 சதம் வனப் பகுதியாகும்.

  இந்த வனப் பகுதிகளில் யானை, சிறுத்தை புலி, கரடி, மான், மலைப் பாம்பு உள்ளிட்டவை உள்ளன. குறிப்பாக, யானைகள் அதிக அளவில் வசிக்கின்றன.

  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயங்கும் கல் குவாரிகளால் வன விலங்குகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வனப் பகுதிகளில் அடர்ந்து வளரும் களைச் செடிகளான உன்னி முள் செடிகள் (லேன்டினா மேமலா), வேலிகாத்தான் என அழைக்கப்படும் கருவேலம் மரம், பார்த்தீனியம் ஆகியவற்றின் ஆக்கிரமிப்பால் வனப் பகுதி பாதிக்கப்படும் நிலை உள்ளது.

  உன்னி முள் செடியானது அழகிய மஞ்சள், ஊதா, வெள்ளை ஆகிய நிறங்களில் பூக்கும்.

  மிளகு போன்ற அளவில் கொத்துக் கொத்காக கரிய நிறத்தில் இதன் பழங்கள் இருக்கும்.

  கிராமங்களில் இந்தச் செடியை வேலியாகவும் பயன்படுத்துவதைக் காணலாம்.

  புதர் வகையான இந்தச் செடி, அடர்த்தியாக வளர்வதால் வனப் பகுதிகளில் புல் வளர்ச்சி தடுக்கப்படுகிறது.

  இந்தக் களைச் செடி அடர்த்தியாக வளர்வதால் சூளி ஓளி, ஆக்சிஜன் ஆகியவை தடைபட்டு புல்வெளிகள் அழிக்கப்படுகின்றன.

  யானையின் முக்கிய உணவான புல்கள் அழிக்கப்படுவதால், யானைகள் வனத்திலிருந்து வெளியேறி வனத்தின் அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைகின்றன.

  மேலும், மான்களின் எண்ணிக்கையும் குறைகின்றன. இதனால், வனச் சுழற்சி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

  வனத்தைப் பாதிக்கும் உன்னி களைச் செடியானது தற்போது பூத்து காய் காய்க்கும் பருவம் ஆகும். எனவே, இத்தகைய பருவத்தில் இந்தச் செடிகளை வேரோடு பிடிங்கி அழிப்பதன் மூலம் வனத்தைக் காக்கலாம். இதற்கு பொதுமக்களின் பங்களிப்பு முக்கியம்.

  உன்னி முள் செடியின் கிளைகளை பொடியாக்கி, அவற்றை கட்டியாக்கி எரிபொருள்களாக மாற்றும் தொழில்நுட்பத்தை அனைவரும் பயன்படுத்தும் வகையில் எளிமையாக்க வேண்டும்.

  நகரப் பகுதிகளில் இத்தகைய எரிபொருளின் பயன்பாட்டை அதிகரிக்க வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் மலைவாழ் மக்களுக்கு வருவாய் கிடைப்பதோடு மட்டுமல்லாமல் வனப் பகுதிகளில் அடர்த்தியாக வளரும் இந்த களைச் செடிகளின் வளர்ச்சி கட்டுப்படுத்தப்படும்.

  களைச் செடியான உன்னி முள் செடியைக் கட்டுப்படுத்த பரிசோதனை முறையில் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டது.

  தருமபுரி மாவட்டம், அரூர் கோட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டி வனப் பகுதிகளில் அதாவது 5 ஏக்கர் பரப்பளவில் அடர்ந்து வளர்ந்த உன்னி முள் செடிகளை முழுவதும் அகற்றி, வன விலங்குகளுக்கு உணவாகப் பயன்படும் மூங்கில் கூபாபுல் போன்ற உணவுப் பயிர்கள் நடவு செய்யப்பட்டுள்ளன.

  இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட வன அலுவலர் ஏ.கே.உலகநாதன் கூறியது:

  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உன்னி முள் செடியை முற்றிலும் அழிக்கும் வகையில் மகாராஜா காப்புக் காட்டில் இந்த களைச் செடிகளை அழிக்க திட்டம் திட்டப்பட்டுள்ளது. அரசின் அனுமதி கிடைத்தவுடன் படிப்படியாக மாவட்டம் முழுவதும் இந்தச் செடிகளை அழிக்கும் பணி தொடங்கும் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai