சுடச்சுட

    

    சாலை விபத்தில் இளைஞர் சாவு:  கிருஷ்ணகிரி அருகே மறியல், கல்வீச்சு; கும்பலைக் கலைக்க போலீஸார் தடியடி

    By  கிருஷ்ணகிரி,  |   Published on : 04th November 2013 12:15 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிருஷ்ணகிரி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். இதையடுத்து, அங்கு மேம்பாலம் அமைக்கக் கோரி, அந்தப் பகுதி மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கிருந்த வாகனங்கள் மீது கல்வீசித் தாக்கினர். இதைத்தொடர்ந்து, போலீஸார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர். இந்தக் கல்வீச்சு சம்பவத்தில் கிருஷ்ணகிரி காவல் துணைக் கண்காணிப்பாளர் சந்தனபாண்டியன் உள்பட 5-க்கும் மேற்பட்ட போலீஸார் லேசான காயமடைந்தனர்.
     கிருஷ்ணகிரி அருகே உள்ள பெத்தம்பட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (25). இவர் தனது உறவினர் சுமதி (19), காளியப்பன் (45) ஆகியோருடன் இரு சக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரியில் இருந்து பெத்தம்பட்டிக்குச் சென்றார்.
     அப்போது, கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தண்டேகுப்பத்தில் சாலையைக் கடந்த போது, அந்த வழியாக வந்த தனியார் சொகுசுப் பேருந்து இரு சக்கர வாகனம் மீது மோதியது.
     இதில் பலத்த காயமடைந்த கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த சுமதி, காளியப்பன் ஆகியோர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
     இந்த நிலையில், கிருஷ்ணன் உயிரிழந்த தகவல் அறிந்து சம்பவ இடத்தில் குவிந்த பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
     இதுகுறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி நகர போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
     ஆனால், அப்போது அங்கிருந்த சிலர், சடலத்தை எடுத்துச் செல்ல வந்திருந்த ஆம்புலன்ஸ் வாகனம் மீதும், மற்றொரு தனியார் பேருந்து மீதும் கல்வீசித் தாக்குதல் நடத்தினர்.
     இதில் அந்த இரு வாகனங்களின் கண்ணாடிகளும் சேதமடைந்தன.
     மேலும், அங்கு நின்றிந்த மற்ற வாகனங்கள் மீதும் கல்வீசித் தாக்குதல் நடத்தினர்.
     5 பேர் காயம்: இதனால், போராட்டக்காரர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இதையடுத்து, அங்கிருந்து கலைந்து சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர், தொலைவில் நின்று கொண்டு போலீஸார் மீதும் கல் வீசினர். இதில், காவல் துணைக் கண்காணிப்பாளர் சந்தானபாண்டியன், அதிரடிப் படை காவலர் கார்த்திகேயன் உள்ளிட்ட 5 பேர் காயமடைந்தனர்.
     இந்தச் சம்பவம் தொடர்பாக 10-க்கும் மேற்பட்டவர்களை போலீஸார் பிடித்துச் சென்று விசாரிக்கின்றனர். இந்தச் சாலை மறியலால் கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai