சுடச்சுட

    

    கிருஷ்ணகிரி அருகே  விவசாயி கொலை: வாகனங்கள் எரிப்பு

    By  கிருஷ்ணகிரி,  |   Published on : 05th November 2013 10:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிருஷ்ணகிரி அருகே இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறை விலக்கிய விவசாயி கொலை செய்யப்பட்டார்.
     இதைத்தொடர்ந்து, கொலை செய்தவர்களின் டிராக்டர், மோட்டார்சைக்கிள்கள் ஆகியவற்றுக்கு பாதிக்கப்பட்டவர் தரப்பைச் சேர்ந்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு தீ வைத்தனர்.
     கிருஷ்ணகிரி அருகே உள்ள பாலகுறியைச் சேர்ந்த சகோதரர்கள் பெருமாள், சின்னசாமி. இவர்களில் சின்னசாமிக்கு விக்கிரமாதித்தன் (35), பாலமுருகன் (35) என இரு மகன்கள் உள்ளனர். பெருமாளுக்கு பச்சையப்பன் (35), சூரியா (30) என இரு மகன்கள் உள்ளனர். தில்லியில் ராணுவத்தில் பணியாற்றி வரும் சூரியா, விடுமுறைக்கு பாலகுறிக்கு வந்துள்ளார்.
     இந்த இரு குடும்பத்தினரும் பாலகுறியை அடுத்த வசந்த் நகரில் அருகருகே வசித்து வருகின்றனர்.
     அவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டார்களாம். அப்போது அங்கு வந்த விக்கிரமாதித்தனின் மாமனாரான விவசாயி முனியப்பன் (65), தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி விலக்கினாராம்.
     இதில் ஆத்திரமடைந்த பச்சையப்பன், சூரியா ஆகியோர் முனியப்பனை பலமாகத் தாக்கினார்களாம். இதில், பலத்த காயம் அடைந்த முனியப்பன், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக பெங்களூர் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
     இந்தத் தகவலை அறிந்த விக்கிரமாதித்தன், பாலமுருகன் தரப்பினர், பச்சையப்பன், சூரியா ஆகியோருக்குச் சொந்தமான டிராக்டர், மோட்டார்சைக்கிள் ஆகியவற்றைத் தீயிட்டு எரித்து, அவர்களது வீட்டையும் ஆயுதங்களால் தாக்கினார்களாம். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
     இந்த நிலையில், பச்சையப்பன் தரப்பினர் பாலமுருகனின் ஆம்னி வேனை அடித்து நொறுக்கினர்.
     இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். மேலும், பாலகுறி உள்ளிட்ட இடங்களில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.
     இருவர் கைது: இந்த நிலையில், முனியப்பன் உயிரிழந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி போலீஸார் கொலை வழக்காகப் பதிந்து, ராணுவ வீரான சூரியா மற்றும் அவரது சகோதரர் பச்சையப்பனைக் கைது செய்தனர்.
     மேலும், பச்சையப்பன், சூரியா ஆகியோரின் வீட்டைத் தாக்கியது, வாகனங்களுக்கு தீ வைத்தது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai