சுடச்சுட

  

  கரும்பு பரப்பளவு பிரித்தளிக்கும் கூட்டத்தில்  விவசாயிகள் கடும் வாக்குவாதம்

  By  கிருஷ்ணகிரி,  |   Published on : 06th November 2013 01:05 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் கரும்பு பயிர் பரப்பளவு பிரித்தளித்தல் குறித்து செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில், கூட்டுறவுச் சர்க்கரை ஆலைக்கு ஆதரவாகப் பேசிய விவசாயிகளுக்கு, சில விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்து பேசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
   கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கல்லாவி, சிங்காரப்பேட்டை பகுதிகளில் விளையும் கரும்பை திருப்பத்தூர் கூட்டுறவுச் சர்க்கரை ஆலைக்கோ அல்லது தனியார் சர்க்கரை ஆலைக்கோ பகிர்ந்து அளிப்பது குறித்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆணைப்படி, கரும்பு விவசாயிகளிடம் கருத்துக் கேட்புக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சர்க்கரைத் துறை இயக்குநர் மகேசன் காசிராஜன், மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
   இதில், தனியார் சர்க்கரை ஆலைக்கு ஆதரவாக விவசாயிகள் பேசியது:
   கூட்டுறவு ஆலை நிர்வாகத்தினர் உரிய காலத்தில் கரும்பை அறுவடை செய்வதில்லை. மேலும், லாரி அனுப்புவதற்கும், கரும்பு வெட்டுக்கான உத்தரவு பெறுவதற்கும் அதிகாரிகளுக்கு பணம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது.
   சில நேரங்களில் கரும்பு வெட்டி மூன்று நான்கு நாள்கள் கடந்தும் கரும்பை ஆலைக்கு கொண்டு செல்வதில்லை. ஆனால், தனியார் ஆலை நிர்வாகத்தினர் உடனுக்குடன் பணம் கொடுக்கின்றனர். விவசாயிகளுக்கு தேவைப்படும்போது கடன் அளிக்கின்றனர் என்றனர்.
   கூட்டுறவுச் சர்க்கரை ஆலைக்கு ஆதரவாக விவசாயிகள் பேசியது: தனியார் ஆலைக்கு கரும்பு பரப்பளவு பிரித்து அளித்தால், கூட்டுறவுச் சர்க்கரை ஆலை மூடும் நிலை ஏற்படும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்பட்ட தனியார் சர்க்கரை ஆலை மூடப்பட்டதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர் என்றனர்.
   கூட்டுறவுச் சர்க்கரை ஆலைக்கு ஆதரவாக விவசாயிகள் பேசிய போது, தனியார் சர்க்கரை ஆலைக்கு ஆதரவான விவசாயிகள் எதிர்த்து குரல் எழுப்பினர். கூட்டத்தில் இரு தரப்பினரும் ஆவேசமாக பேசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இரு தரப்பினரையும், பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸார், சமாதானப்படுத்தினர்.
   ஒரு சில விவசாயிகள் பேசும்போது, விவசாயிகளின் சுதந்திரம் பாதிக்காத வகையில் கரும்பு சாகுபடி பரப்பளவை பிரித்தளிக்க வேண்டும் என்றனர். தொடர்ந்து, விவசாயிகள் தனித் தனியே தங்களது கருத்துகளைப் பதிவு செய்தனர்.
   இதில், திருப்பத்தூர் கூட்டுறவுச் சர்க்கரை ஆலையின் நிர்வாக இயக்குநர் குழந்தைவேலு, தலைவர் செல்வம், எல்லை வரையரைக் குழு உறுப்பினர் வேட்டவலம் மணிகண்டன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai