Enable Javscript for better performance
கேள்விக் குறியாகும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி- Dinamani

சுடச்சுட

    

    கேள்விக் குறியாகும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி

    By  ஒசூர்,  |   Published on : 06th November 2013 12:59 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஒசூர் அருகே அரசு பள்ளியைத் தரம் உயர்த்திய அரசு, நிரந்தர ஆசிரியர்களை நியமிக்காததால், கிராமப்புற மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது.
     ஒசூர் கல்வி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், கெலமங்கலம் ஒன்றியத்திற்கு உள்பட்டது உனிசெட்டி கிராமம். இந்தக் கிராமத்தில் 1950 ஆண்டு அரசு நடுநிலைப் பள்ளி தொடங்கப்பட்டது. சுற்றுப்பகுதி மாணவர்களும் இந்தப் பள்ளிக்கு வருவதால், உயர்நிலைப் பள்ளியாக கடந்த ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது.
     கர்நாடகத்திற்கு அருகே இந்தப் பள்ளி அமைந்துள்ளது. பள்ளியில் சுமார் 280 மாணவர்கள் 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கின்றனர். இந்தப் பள்ளிக்கு நிரந்த தலைமையாசிரியர், வகுப்பு ஆசிரியர், பாட ஆசிரியர்கள் இல்லை. இந்தப் பள்ளிக்கு நிரந்தரப் பணிக்கு நியமனம் பெற்று வரும் ஆசிரியர்கள், அடுத்த ஆண்டிலேயே நகரப் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மாறுதல் பெற்றுச் சென்று விடுகின்றனர்.
     இந்தப் பள்ளிக்கு நிரந்தர தலைமையாசிரியர், பாட வாரியாக நிரந்தர ஆசியர்களை நியமிக்கக் கோரி, அரசை வலியுறுத்தி பல்வேறு கட்டப் போராட்டங்களை மாணவர்களின் பெற்றோர்கள் நடத்தினர். இருப்பினும், அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
     கிராமப் பகுதி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் நிலையில், பள்ளிக்கு அடிப்படைத் தேவையான நிரந்தர ஆசிரியர்களை அரசு நியமிக்க நடவடிக்கை எடுக்காததால், மாணவர்களின் கல்வித் தரம் கேள்விக்குறியாக உள்ளது.
     மொத்தம் 280 மாணவர்கள் படிக்கும் இந்தப் பள்ளியில் 9 ஆசிரியர்கள் பணியிடங்கள் உள்ளன. ஆனால், 4 ஆசிரியர்கள் மட்டுமே பொறுப்பாசிரியர்களாகப் பணிபுரிகின்றனர்.
     மேலும், பள்ளியில் கழிப்பிட வசதி இல்லை. வகுப்பறைகளின் கதவு, ஜன்னல்களை உடைத்த சமூக விரோதிகள், இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.
     பள்ளியில் நிரந்தர தலைமை ஆசிரியர், பாட வாரியாக ஆசிரியர்களை உடனடியாக அரசு நியமித்து, பள்ளியில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதுடன், சமூக விரோதிகளைக் கட்டுப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்களும், பெற்றோரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai