சுடச்சுட

  

  கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே வனப் பகுதியையொட்டியுள்ள கிராமங்களில் இரண்டாவது நாளாக சனிக்கிழமை புகுந்த யானைகள் ராகி, நெல் பயிர்களைச் சேதப்படுத்தின.

  சூளகிரி அருகேயுள்ள போடூர்பள்ளம் வனப் பகுதியில் சுற்றித் திரியும் சுமார் 40-க்கும் மேற்பட்ட யானைகள் காமன்தொட்டி, நாயக்கன்தொட்டி ஆகிய கிராமங்களில் புகுந்து, அங்கு விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள விவசாயப் பயிர்களைச் சூறையாடி வருகின்றன.

  காமன்தொட்டி கிராமத்தில் சனிக்கிழமை ராமக்கவுண்டரின் நிலத்தில் அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்த ராகி பயிர்களை யானைகள் தின்றுவிட்டுச் சென்றன.

  மேலும், முனிராஜ் என்பவரின் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிர்களை மிதித்து சேதப்படுத்தின.

  இதுதவிர, பக்கத்து நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த தக்காளி, பீன்ஸ், முட்டைகோஸ், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களும் யானைகளால் சேதப்படுத்தப்பட்டன.

  பாதிக்கப்பட்ட விவசாயிகளை கிருஷ்ணகிரி மாவட்ட திமுக செயலர் டி.செங்குட்டுவன் எம்எல்ஏ சனிக்கிழமை சந்தித்து விவரம் கேட்டறிந்தார்.

  அப்போது, அங்கு வந்த மாவட்ட வன அலுவலர் உலகநாதனிடம், விவசாய நிலங்களுக்கு யானைகள் வருவதைத் தடுக்க அகழிகள் வெட்டவும், மின் வேலி அமைக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

  மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் செங்குட்டுவன் வலியுறுத்தினார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai