சுடச்சுட

  

  வரும் மக்களவைத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மத்திய முன்னாள் அமைச்சர் அன்புமணி போட்டியிடப் போவதாகக் கூறுவது வெறும் ஊகமே என, அந்தக் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார்.

  ஒசூரில் புதிய நீதி கட்சியைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்டவர்கள் பாமகவில் அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே.மணி முன்னிலையில் திங்கள்கிழமை இணைந்தனர்.

  இந்த விழாவில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது ஜி.கே.மணி இதைத் தெரிவித்தார்.

  மேலும் அவர் கூறியது:

  தமிழகத்தில் சென்னைக்கு அடுத்ததாக வளர்ந்து வரும் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் கனரக தொழில்சாலைகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு அதற்கான சாத்தியக்கூறுகள் அதிக அளவில் உள்ளன. ஒசூரில் இருந்து சென்னைக்கு 6 வழிச் சாலை, அருகிலேயே பெங்களூர் விமான நிலையம் உள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கனரக தொழில்சாலைகளால் 2 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புக் கிடைத்துள்ளது.

  இந்தப் பகுதி வளர்ச்சியடைய மேலும் சில கனரகத் தொழில்சாலைகளைத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஒசூரில் தனியார் சரக்கு விமானச் சேவையை உடனடியாக தொடங்க வேண்டும். ஒசூரில் உற்பத்திச் செய்யப்படும் காய்கறிகள், ரோஜா மலர்கள், தொழில்சாலையில் உற்பத்தி செய்யும் பொருள்களை ஏற்றுமதி செய்ய இது மிகவும் பயனுள்ளதாக அமையும்.

  மேலும், இந்தப் பகுதியில் ஒரு ஒன்றியத்திற்கு ஒரு குளிரூட்டும் நிலையம் அமைக்க வேண்டும். வேளாண் தொழில்சாலை அமைக்க ஏதுவான பகுதி ஒசூர். இங்கு அதிக அளவில் காய்கறிகள் உற்பத்தியானாலும் விவசாயிகள் பயனடைவதில்லை.  பொதுமக்களுக்கும் எந்தப் பயனுமில்லை. வியாபாரிகள்தான் கொள்ளை லாபம் அடைகின்றனர்.

  எனவே, மொத்த கொள்முதல் நிலையத்தையும், காய்கறி விற்பனை அங்காடியையும் அரசு சார்பில் தொடங்க வேண்டும். மூடிய தொழில்சாலைகளை மீண்டும் திறக்கவும், நலிந்த தொழில்சாலைகளை மேம்படுத்தவும் திட்டத்தை தயாரிக்க வேண்டும்.

  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும். இங்கிருந்து சென்னைக்கு ஜோலார்பேட்டை வழியாக ரயில் பாதை அமைக்க வேண்டும். ஒசூரில் சுகாதார சீர்கேடு அதிகமாக உள்ளது. துப்புரவுப் பணிகளை உடனடியாக சீர் செய்ய வேண்டும் என்றார் அவர்.

  இந்தப் பேட்டியின் போது பாமக மாவட்டச் செயலாளர் அருண்ராஜன், முன்னாள் மாவட்டச் செயலாளர் முனிராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai