Enable Javscript for better performance
புள்ளிமான் குட்டிக்கு தீவிர சிகிச்சை- Dinamani

சுடச்சுட

    

    புள்ளிமான் குட்டிக்கு தீவிர சிகிச்சை

    By கிருஷ்ணகிரி  |   Published on : 12th November 2013 06:01 AM  |   அ+அ அ-   |    |  

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே வனப் பகுதியிலிருந்து செம்மறியாட்டுக் கூட்டத்துடன் கால் உடைந்த நிலையில் வெளியேறிய புள்ளிமான் குட்டிக்கு வனத் துறையினர் தீவிர சிகிச்சை அளித்து பராமரித்து வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள சின்னகாரகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அந்தப் பகுதியில் உள்ள வனப் பகுதியில் செம்மறியாடுகளை மேய்ப்பது வழக்கம். இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு மேய்ச்சலுக்குப் பிறகு வீடு திரும்பிய போது, ஆட்டுக் கூட்டத்தில் புள்ளிமான் குட்டி இருப்பதை கிராமத்தினர் கண்டனர்.  இதுகுறித்து, அவர்கள் கிருஷ்ணகிரி வனச் சரகர் அ.பாபுவுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து, அந்தக் கிராமத்துக்குச் சென்ற வனத் துறையினர், கால் உடைந்த நிலையில் சிரமத்துடன் நடந்துக் கொண்டிருந்த, பிறந்து 3 மாதம் ஆன புள்ளிமான் குட்டியை கிருஷ்ணகிரி வனச் சரக அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர், அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையில் புள்ளிமானுக்கு சிகிச்சை அளித்தனர்.

    கால்நடை மருத்துவர் கந்தசாமி, மான் குட்டிக்கு உரிய சிகிச்சை அளித்தார். மேலும், காலில் ஏற்பட்ட புண்ணுக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது வனத் துறையினர் ஒரு கூண்டில் வைத்து புள்ளி மானுக்கு தேவையான பால், குளுக்கோஸ் மற்றும் சத்து மருந்துகள், அருகம்புல் ஆகியவற்றை அளித்து பராமரித்து வருகின்றனர்.

    காலில் ஏற்பட்ட புண் மற்றும் எலும்பு முறிவு குணமடைந்த பின்னர் வனப் பகுதியில் புள்ளிமான் விடுவிக்கப்படும் என வனத் துறையினர் தெரிவித்தனர்.

    kattana sevai