சுடச்சுட

  

  அரசின் நலத் திட்ட உதவிகள் கிடைக்காமல் மலைக் கிராம மக்கள் அவதி

  By கிருஷ்ணகிரி  |   Published on : 16th November 2013 03:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மலைக் கிராமங்களைக் கொண்ட பெட்டமுகிலாளம் ஊராட்சியில் அரசின் நலத் திட்ட உதவிகள் கிடைக்கவில்லை எனப் புகார் எழுந்துள்ளது.

  கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது பெட்டமுகிலாளம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் முக்கங்கரை, கன்னிகாபுரம், கம்பாலா, தட்டகிரி, போப்பனூர், கல்லூர், காளிகொட்டம், தாசகொல்லை, தொட்டமாளம், சித்தாபுரம், ஜெயபுரம் என 40-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

  இவை அனைத்தும் மலைக் கிராமங்கள் ஆகும்.

  சுமார் 9 ஆயிரம் மக்கள் தொகை உள்ள இந்தக் கிராமங்களில் 2,500 குடும்பங்கள் உள்ளன. இவர்கள் பெரும்பாலும் விவசாயத் தொழிலையே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். குடிநீர் வசதி, இலவச ஆடு, மாடுகள் வழங்கும் திட்டங்களால் இந்தக் கிராமங்களில் வாழும் மக்கள் பயனடைந்துள்ளனர்.

  குடும்ப அட்டை இல்லை: இருப்பினும், குடும்ப அட்டை, கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான உதவித்தொகை, விதவைகளுக்கான உதவித்தொகை, உழவர் அட்டை, ஓய்வூதியத் தொகை, சாதிச் சான்றிதழ், விலையில்லா மின்பொருள்கள், தொகுப்பு வீடுகள் போன்ற அரசின் நலத் திட்ட உதவிகள் அவர்களுக்கு கிடைக்கவில்லை எனப் புகார் எழுந்துள்ளது.

  கடந்த சில மாதங்களாக அந்தப் பகுதிகளின் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யும் வகையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றதாகவும், இத்தகைய முகாம்களில் பல மனுக்கள் அளித்தும் இதுவரை உதவிகள் கிடைக்கவில்லை என்றும் அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

  10 ஆண்டுகள் காத்திருப்பு: காமகிரியைச் சேர்ந்த விவசாயி சித்தாராமன் (35) கடந்த 10 ஆண்டுகளாக குடும்ப அட்டைக்காக மனு அளித்து காத்திருப்பதாகத் தெரிவித்தார். குடும்ப அட்டை இல்லாததால் அரசின் நலத் திட்ட உதவிகள் கிடைப்பதில்லை என்றும், பள்ளி செல்லும் மாணவர்களுக்கு அரசின் நலத் திட்ட உதவிகள் பெற முடியவில்லை என்றும் கூறினார்.

  ""கடந்த 2011-ஆம் ஆண்டு தேன்கனிக்கோட்டையில் நடைபெற்ற அரசு முகாமில் குடும்ப அட்டைக்காக 26 பேர் மனு  அளித்தோம். இதுவரை குடும்ப அட்டை கிடைக்கவில்லை'' என ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரின் கணவர் சுவாமியப்பன் (50) தெரிவித்தார். இதே குற்றச்சாட்டை பெட்டமுகிலாளம் ஊராட்சியின் உறுப்பினர் எஸ்.பி.புகழேந்தியும் தெரிவித்தார்.

  பெட்டமுகிலாளம் ஊராட்சியில் லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கின்றனர். கடந்த காலங்களில் இந்தப் பகுதி மக்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் "ஜங்கம்' என்ற சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது.

  ஆனால், தற்போது தங்களின் குழந்தைகளுக்கு பொதுப் பிரிவில் சாதிச் சான்றிதழ் வழங்கப்படுவதாகவும், இதனால், தாங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

  வீடுகள் தேவை: மேலும், தங்கள் பகுதியில் வாழும் பழங்குடியின மக்களுக்கு மட்டும் தொகுப்பு வீடுகள் வழங்கப்படுகின்றன. அவை பெரும்பாலும் பயன்படுத்தப்படாமல் பாழடைந்து போவதால், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மற்ற பிரிவினருக்கும் தொகுப்பு வீடுகளை ஒதுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், விதவைகள் மற்றும் முதியவர்களுக்கான அரசு நலத் திட்ட உதவிகள் கிடைக்கவில்லை என ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எஸ்.பி.ருத்தரப்பா தெரிவித்தார்.

  கல்வியைக் கைவிடும் நிலை: தேன்கனிக்கோட்டைக்கு  பேருந்து வசதி போதுமானதாக இல்லை. உயர் கல்விக்காக தேன்கனிக்கோட்டைக்கு செல்லும் மாணவர்கள் காலையில் 6 மணிக்கு புறப்பட்டுச் சென்று இரவு 8 மணிக்கு வீடு திரும்பும் நிலை உள்ளது.

  காட்டு யானைகள் அதிக நடமாட்டம் உள்ள இந்தப் பகுதியில் பேருந்து வசதி இல்லாததால், இந்தப் பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்வியைத் தொடர இயலாத நிலை உள்ளது.

  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் கூறியது:

  பெட்டமுகிலாளம் ஊராட்சி மக்களுக்கு அரசின் நலத் திட்ட உதவிகள் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், மக்களின் வசதிக்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி புதுவாழ்வுத் திட்டத்தின் கீழ் மாநில சமச்சீர் நிதி மூலம் ஷேர் ஆட்டோக்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai