சுடச்சுட

  

  எண்ணெய் வித்து பயிரான நிலக்கடலையை தரத்துடன் பிரித்தெடுக்க இயந்திரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் கூடுதல் வருவாய் ஈட்டலாம் என டாக்டர் பெருமாள் வேளாண்மை அறிவியல் மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் டி.சுந்தரராஜ் தெரிவித்தார்.

  நாட்டின் விவசாயப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக எண்ணெய் வித்துப் பயிர்கள் திகழ்கின்றன. எண்ணெய் வித்துப் பயிர்கள் மட்டும் 1.65 கோடி ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்படுகின்றன.

  இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மிக முக்கியமான எண்ணெய் வித்துப் பயிராக நிலக்கடலை விளங்குகிறது. தமிழகத்தில் நிலக்கடலையானது 25 சதம் மானாவாரியாகவும், 75 சதம் இறவையிலும் சாகுபடி செய்யப்படுகிறது.

  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 11,214 ஹெக்டேர் பரப்பளவில் மானாவாரியாக நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. நிலக்கடலையை அறுவடை செய்வதற்கு வேலை ஆள்கள் பற்றாக்குறையாலும், அதிக கூலியும் கொடுக்கும் நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்கள் பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றனர்.

  தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகளிடம் அறுவடை செய்த பயிரிலிருந்து நிலக்கடலையைப் பிரித்தெடுக்கும் இயந்திரம் குறித்து செயல்விளக்கம் செய்து காட்டப்பட்டு வருகிறது.

  இந்த இயந்திரத்தின் மூலம் அறுவடைக்குப் பிறகு கடலைகளை தனியாகப் பிரிக்கப் பயன்படுத்தப்படும் வேலை ஆள்களின் தேவையைப் பாதியாக குறைக்க முடியும். மேலும், கிராமப்புற விவசாயிகள், பெண்கள் இந்த இயந்திரத்தை எளிதாக கையாளலாம்.

  ஓர் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட நிலக்கடலை செடிகளைப் பிடுங்கி, அதில் இருந்து கடலைகளை தனியாகப் பறித்து எடுக்க சுமார் 40 ஆள்கள் தேவைப்படுவர்.

  தற்போதைய நிலையில், ஒரே நேரத்தில் இவ்வளவு எண்ணிக்கையிலான ஆள்கள் கிடைப்பது கடினம். மேலும், வேலை ஆள்களுக்கு கூலியாக ரூ.4,800 வரை செலவாகிறது.

  இந்த இயந்திரத்தின் மூலம் நிலக்கடலைச் செடிகளை மட்டும் நிலத்திலிருந்து வேலை ஆள்களைக் கொண்டு அறுவடை செய்ய வேண்டும். அதற்கு சுமார் 15 பேர் தேவைப்படுவார்கள். பின்னர், இந்த இயந்திரத்தைப் பயன்படுத்தி நிலக்கடலை காய்களை மட்டும் தனியாகப் பிரிக்க 8 பேர் போதுமானது.

  இவ்வாறு செய்யும்போது ஓர் ஏக்கருக்கு ரூ.2,670 மட்டுமே செலவாகிறது. காய்கள் தனியாகவும், கொடி தனியாகவும் கிடைக்கப் பெறும். மண் இன்றி கொடிகள் சுத்தமாகக் கிடைப்பதால் அவற்றை கால்நடைகளுக்கு அப்படியே தீவனமாகவும் பயன்படுத்தலாம். இந்த இயந்திரத்தை 8 மணி நேரம் தொடர்ந்து இயக்கினால் 1.5 யூனிட் வரை மின்சாரம் செலவாகும். நிலக்கடலை மணிகளைப் பிரிக்கும்போது கடலைகள் உடையாது. இந்த இயந்திரத்தின் விலை ரூ.22 ஆயிரம் ஆகும்.

  மேலும் விவரங்களுக்கு டி.சுந்தர்ராஜ், திட்ட ஒருங்கிணைப்பாளர், டாக்டர் பெருமாள் வேளாண்மை அறிவியல் மையம், எலுமிச்சங்கிரி கிராமம், கிருஷ்ணகிரி என்ற முகவரியிலோ அல்லது 94438 88644 என்ற கைபேசி எண்ணிலோ அல்லது 04343-296039, 201030 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai