சுடச்சுட

    

    கெலமங்கலம் அருகே நிறுத்தப்பட்ட நகரப் பேருந்தை மீண்டும் இயக்கக் கோரி, பேருந்தை சிறைபிடித்து மாணவர்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட் ஜே.காரப்பள்ளியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேன்கனிக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கின்றனர்.

    இந்த மாணவர்கள் தினமும் நகரப் பேருந்தில் பள்ளிக்குச் சென்று வருகின்றனர். இந்தப் பேருந்து ஜே.காரப்பள்ளியில் இருந்து காலை 8.30, பிற்பகல் 1.30, மாலை 5.30 மணி என மூன்று முறை தேன்கனிக்கோட்டைக்கு இயக்கப்பட்டது. இதனால், அந்த கிராம மக்களும், மாணவர்களும் சென்று வர வசதியாக இருந்தது.

    இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக அந்தப் பேருந்து இயக்கப்படவில்லை. இதனால், ஆத்திரமடைந்த மாணவர்கள், வியாழக்கிழமை வந்த அந்த நகரப் பேருந்தை ஜே. காரப்பள்ளி கிராமத்திலிருந்து செல்லவிடாமல் முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தகவலறிந்த கெலமங்கலம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நகரப் பேருந்தை தினமும் இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு பேருந்தை விடுவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai