சுடச்சுட

    

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே காட்டு யானைகளால் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி, வனத் துறையினரின் வாகனங்களை விவசாயிகள் வெள்ளிக்கிழமை சிறைபிடித்தனர்.

    கர்நாடக வனப் பகுதியிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் கிருஷ்ணகிரி மாவட்ட வனப் பகுதிகளில் புகுந்தன. அவை பல குழுக்களாகப் பிரிந்து மலையடிவார கிராமங்களிலுள்ள விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெல், கரும்பு, ராகி உள்ளிட்ட பயிர்களை சூறையாடி வருகின்றன.

    சூளகிரி அருகேயுள்ள போடூர்பள்ளம் வனப் பகுதியில் கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக 44 யானைகள் சுற்றித் திரிகின்றன. இரவு நேரங்களில் அவை விளைநிலங்களில் புகுந்து ராகி, தக்காளி, வாழை, நெல் உள்ளிட்ட பயிர்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தி வருகின்றன.

    இந்த யானைகளை கர்நாடக வனப் பகுதிக்கு விரட்டும் பணியில் ஒசூர் கோட்ட வனத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், யானைகள் சாணமாவு வனப் பகுதி வரை சென்று விட்டு, மீண்டும் போடூர்பள்ளம் வனப் பகுதிக்கு திரும்பி விடுகின்றன.

    இந்த நிலையில், போடூர்பள்ளம் பகுதிக்கு வனத் துறையினர் வந்த அரசு வாகனத்தை விவசாயிகள் வெள்ளிக்கிழமை சிறைபிடித்தனர். யானைகளால் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். யானைகள் விவசாய நிலங்களுக்கு வராதபடி மின்வேலி அமைக்க வேண்டும். அகழி வெட்ட வேண்டும். மீண்டும் ஜளவகிரி காட்டுக்கு யானைகளை விரட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினர். தகவலறிந்த சூளகிரி போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்த விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக வனத் துறையினர் உறுதியளித்ததையடுத்து விவசாயிகள் வாகனங்களை விடுவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai