சுடச்சுட

    

    வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தும்போது அதில் பாதிக்கப்படுபவர்களை காக்கும் வகையில் கிராமங்கள்தோறும் பாதுகாப்பு குழுவை அமைப்பது என அனைத்து சமுதாயப் பேரியக்கம் முடிவு செய்துள்ளது.

    அனைத்து சமுதாயப் பேரியக்கம் சார்பில், வட்டார அளவிலான ஆலோசனைக் கூட்டம் கிருஷ்ணகிரியில் சனிக்கிழமை நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்துக்கு அனைத்து சமுதாய பேரியக்க ஒருங்கிணைப்பாளர் ஜி.கே.மணி தலைமை வகித்தார்.

    கொங்கு வேளாளக் கவுண்டர் பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் ஜி.கே.நாகராஜ், 24 மனை தெலுங்கு செட்டியார் நலச் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் வி.ராஜவடிவேல், தெலுங்கு (நாயுடு) மக்கள் சங்க மாநிலத் தலைவர் ராஜ்குமார், வீரசைவ லிங்காயத் சங்க மாவட்டத் தலைவர் கோடீஸ்வரன், ஒக்கலிக்கா கவுடர் மகாஜன சங்க மாவட்டத் தலைவர் கோபால், வன்னியர் சங்க நிர்வாகி ரா.சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இதில் பங்கேற்றோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தும்போது அதில் பாதிக்கப்படுபவர்களை காக்கும் வகையில் கிராமங்கள் தோறும் 10 உறுப்பினர்களைக் கொண்டப் பாதுகாப்பு குழுவை அமைப்பது என வலியுறுத்திப் பேசினர்.

    வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதை தடுத்து நிறுத்தும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும்.

    மேலும், இந்தச் சட்டத் திருத்தத்தை வலியுறுத்தி குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோரை நேரில் சந்தித்து வலியுறுத்துவது.

    பெண்களின் திருமணத்திற்கு பெற்றோரின் சம்மதத்தைக் கட்டாயமாக்கும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். மாணவிகள், பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மத்தூர்: மத்தூரில் நடைபெற்ற கூட்டத்தில் பா.ம.க, மாவட்டச் செயலாளர் ஆறுமுகம், மாநில துணைப் பொதுச் செயலாளர் மாதேஸ்வரன் ஆகியோர் வரவேற்றனர்.

    யாதவர் சங்க மாவட்டத் தலைவர் நரேஷ்யாதவ், குருமன்ஸ் மக்கள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் சி.முத்துசாமி, 24 மனைத் தெலுங்கு செட்டியர் சங்க மாவட்டச் செயலாளர் ராமகிருஷ்ணன், நாயுடு மகாஜன சங்கம் லட்சுமணன், ஒக்கலிகா மகாஜன சங்க மாவட்டத் தலைவர் கோபால், நாடார் மகாஜன சங்கம் பன்னீர் உள்ளிட்ட பல்வேறு சமுதாயத்தை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai