சுடச்சுட

  

  நெடுஞ்சாலைத் துறையினரின் அலட்சியத்தால் மலைக் கிராமமான பெட்டமுகிலாளம் செல்லும் சாலையில் உள்ள பாலம் இடிந்து விழுந்து இரண்டு ஆண்டுகள் ஆனபோதும் இதுவரை சரி செய்யவில்லை என, கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.

  கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையிலிருந்து பெட்டமுகிலாளம் செல்லும் சாலை 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்தச் சாலையை பெட்டமுகிலாளம், கல்லியூர், மூக்கனூர், காலகொட்டம், காமகிரி, பூப்பனூர், போலக்கொல்லை, சுக்கர்பேடு உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட மலைக் கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர்.

  தற்போது இந்தக் கிராமத்துக்கு ஒரு நகரப் பேருந்து மட்டுமே இயக்கப்படும் நிலையில், போக்குவரத்துக்கு இந்தப் பகுதி மக்கள் பெரும்பாலும் சரக்கு வாகனங்கள், மோட்டார் சைக்கிள்களையே சார்ந்துள்ளனர்.

  இந்த நிலையில், காமகிரி பேருந்து நிறுத்தத்திலிருந்து பெட்டமுகிலாளம் செல்லும் சாலையில் முத்தனூர் கோயில் அருகே உள்ள பாலம், கௌர்திமார் போடு பாலம், பசுவன்புரம் பாலம் ஆகிய இடங்களில் உள்ள பாலங்கள் சரிந்து விழும் நிலையில் உள்ளன. இந்தப் பாலங்களில் பழுதடைந்த பகுதிகளில் செடிகள் புதர்போல வளர்ந்துள்ளன. இதனால், வாகன ஓட்டுநர்களுக்கு சேதமடைந்த பகுதி குறித்து தொலைவில் வரும்போதே தெரிவதில்லை. 

  இந்தப் பகுதிகளைக் கடந்து செல்லும் வாகன ஓட்டுநர்களை எச்சரிக்கும் வகையில் எவ்விதமான முன் அறிவிப்பு பலகையையும் நெடுஞ்சாலைத் துறை வைக்கவில்லை. இதனால், இந்தப் பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. முத்தனூர் கோயில் பாலம் அருகே அபாயகரமான பாலம் குறித்து எச்சரிக்கும் வகையில் கிராம மக்களே வெள்ளையடித்து சிறிய கல்களை வைத்துள்ளனர்.

  25ஆடி ஆழத்தில் சரிந்துள்ள முத்தனூர் கோயில் அருகே உள்ள பாலம், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சரிந்ததாகவும், இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயி உமாபதி (45) தெரிவித்தார்.

  கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாலம் குறித்து அறிந்த நெடுஞ்சாலைத் துறையினர் இந்தப் பகுதியைப் பார்வையிட்டு சென்றதாகவும், ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், கடந்த சில நாள்களுக்கு முன்பு இந்தப் பள்ளத்தில் நகரப் பேருந்து சிக்கி பெரும் விபத்து ஏற்பட இருந்ததாகவும், ஓட்டுநரின் செயல்பாட்டால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.

  அதேபோல, கௌர்திமார் போடு பகுதியில் சிறு ஓடையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தின் அஸ்திவாரம் மழை நீரால் அரிக்கப்பட்டு பாலம் சேதமடைந்துள்ளது. பாலத்தின் அஸ்திவாரக் கல்கள் மழை நீரில்  அடித்துச் செல்லப்பட்டதால், அந்தப் பகுதியில் பெரும் குழி ஏற்பட்டுள்ளது. வரும் மழைக் காலங்களில் இந்த ஓடையில் நீர் வரத்து அதிகரித்தால், பாலம் முற்றிலும் சேதமடைந்து, சாலை துண்டிக்க வாய்ப்புள்ளது.

  பசுவன்புரம் பாலத்தின் அருகே மண் சரியத் தொடங்கி சிறிய அளவில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. மலைக் கிராம மக்களின் நலன் கருதி அபாயகரமானப் பாலங்களை உடனே சீர் செய்ய நெடுஞ்சாலைத் துறையினர் முன் வரவேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

  இதுகுறித்து கிருஷ்ணகிரி கோட்டப் பொறியாளர் கே.பி.சந்திரசேகரன் கூறியது:

  அபாகரமாக உள்ள பாலங்களை இடித்து ரூ.30 லட்சத்தில் புதிய பாலங்கள் கட்ட தமிழக அரசுக்கு திட்ட மதிப்பீடு அனுப்பப்பட்டுள்ளது. உரிய அனுமதி கிடைத்தவும் புதியப் பாலங்கள் கட்டப்படும். மேலும், வாகன ஓட்டுநர்களின் நலன் கருதி, சாலைகளின் இரு புறங்களிலும் எச்சரிக்கை அறிவிப்புப் பலகை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai