சுடச்சுட

  

  உற்பத்தி நிலையங்களை சரியாக பராமரிக்காததே மின் வெட்டுக்கு காரணம்

  By கிருஷ்ணகிரி,  |   Published on : 25th November 2013 04:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மின் உற்பத்தி நிலையங்களைச் சரியாக பராமரிக்காததே மின்வெட்டுக்கு காரணம் என, தமிழக அரசு மீது தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் ஞாயிற்றுக்கிழமை குற்றம்சாட்டினார்.

  கிருஷ்ணகிரியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

  ஏற்காடு இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுக ஆதரவு கேட்டு கடிதம் எழுதியது. இந்தக் கடிதத்தை மேலிடத்துக்கு அனுப்பி விட்டேன். இதற்கு இதுவரை பதில் இல்லை.

  தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு பிரச்னையை தீர்க்கும் வகையில் தமிழக எம்பி.க்கள் மத்திய மின் துறை அமைச்சர் சிந்தியாவை சந்தித்து கோரிக்கை விடுத்தோம். அப்போது, 4,000 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட கடலூர் மின் உற்பத்தி நிலையத்துக்கான கையகப்படுத்தும் பணியும், 400 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட செய்யாறு மின் உற்பத்தி நிலையத்துக்கான ஒப்பந்தப் புள்ளியும் கோரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

  கூடங்குளத்தில் உற்பத்தியாகும் 1,000 மெகா வாட் மின்சாரத்தை தமிழகத்துக்கே வழங்க வேண்டும் என்பதே எங்களது நிலைப்பாடாக உள்ளது.

  தென் மண்டல மின் வழித்தட பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் தமிழக அரசும், மத்திய அரசும் இணைந்து செயல்பட வேண்டும். இந்த பிரச்னையைத் தீர்ப்பதன் மூலம் தமிழகத்துக்கு சீராக மின்சாரம் கிடைக்கும்.

  தூத்துக்குடி அனல் மின் உற்பத்தி நிலையத்தை தமிழக அரசு முறையாக பராமரிக்காததே தற்போதைய மின்வெட்டுக்கு காரணம். தற்போது நிலவும் மின்வெட்டு குறித்து பொதுமக்கள் அறியும் வகையில் முறையாக அறிவிக்க வேண்டும். முறையாக அறிவிக்காததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

  காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றதன் மூலம் எந்தப் பலனும் இல்லை எனக் கூறுவது தவறு. இந்திய அரசின் செயல்பாடுகளை வெளியே தெரிவிப்பது வழக்கம் இல்லை. மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

  இலங்கையில் மீனவர்கள் தொடர்ந்து சிறைபிடிக்கப்படும் பிரச்னை குறித்து தீர்வு காணும் வகையில் விரைவில் இருநாட்டு மீனவர்களும் சேர்ந்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

  இலங்கையில் போருக்கு பின் அமெரிக்கா போன்ற நாடுகள் உதவிய போதும், இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய அரசு மட்டுமே உதவுகிறது.

  சத்தீஸ்கர் உள்பட 5 மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும். மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும்.

  தமிழக புதிய நிர்வாகிகள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ராகுல் காந்தி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என அனைவரும் விருப்புகின்றனர் என்றார் அவர்.

  பேட்டியின் போது, கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் காசிலிங்கம், முன்னாள் எம்பி.க்கள் நரசிம்மன், தீர்த்தராமன், கிருஷ்ணகிரி நகர்மன்ற முன்னாள் தலைவர் சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai