சீத்தாப் பழம் விளைச்சல் அதிகரிப்பு
Published on : 27th November 2013 02:52 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், போதியளவு பருவமழை பெய்ததால், சீத்தா பழ விளைச்சல் அதிகரித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஆந்திர மாநில எல்லையோரப் பகுதிகளான மகாராஜக் கடை, வேப்பனஹள்ளி, காவேரிப்பட்டணம், தொகரப்பள்ளி, காளிகோவில், சந்தூர், குருவிநாயனப்பள்ளி, மேல்பூங்குருத்தி, ஐகுந்தம் உள்ளிட்ட வனப் பகுதிகளில் பாறைகள் அதிகம் இல்லாத பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சீத்தாப் பழ மரங்கள் வளர்ந்துள்ளன. இந்த மரங்கள் மண் அரிப்பை தடுப்பதுடன், வன விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் உணவாகப் பயன்படுகின்றன.
பழ வகைகளில் தனிப்பட்ட மனமும், இனிப்புச் சுவையும் கொண்ட சீத்தாப் பழம், அனோனா தாவர வகையைச் சேர்ந்தது. இந்தப் பழம் மரத்தில் பழுக்கும் தன்மையில்லாததால், முதிர்ந்த காய்களைப் பறித்து பழுக்க வைக்க வேண்டும்.
அதிக மருத்துவக் குணம் கொண்ட சீத்தா மரம் மிதமான தட்பவெப்ப பகுதியிலும் வளரும் தன்மையுடையது.
தமிழகத்திலேயே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சீத்தாப் பழம் அதிக அளவில் விளைகின்றன.
ஜூலை மாதத்தில் பூக்கத் தொடங்கி, நவம்பர் மாதத்தில் அறுவடைக்கு தயாராகிறது.
நிகழ்வாண்டில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போதிய மழை பெய்ததால், சீத்தாப் பழக் காய்கள் வழக்கத்தை விட அதிக அளவில் காய்த்துள்ளன. காயின் தரமும், அளவும் பெரியதாக உள்ளன.
வனப் பகுதியில் வளரும் மரங்களில் காய்களைப் பறிக்க அந்தந்தப் பகுதிகளிலுள்ள கிராம ஊராட்சி நிர்வாகங்கள் ஒப்பந்த முறையில் ஏலம் விடுகின்றன.
ஒப்பந்ததாரர்கள் ஒரு கிலோ ரூ. 6 முதல் 8 வரை வியாபாரிகளுக்கு விற்கின்றனர். உற்பத்தி அதிகரித்துள்ளதால், நிகழாண்டில், சாலையோரங்களில் சிறிய கடைகளை அமைத்து சிறு வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர்.
குறிப்பாக கிருஷ்ணகிரி - ஒசூர் சாலையோரத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் சீத்தாப் பழம் விற்கின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து ஈரோடு, கோவை, சென்னை, பெங்களூர், ஹைதாராபாத், மும்பை, புதுதில்லி உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
ஒரு கிலோ ரூ.6 முதல் 8-க்குள் வாங்கும் மொத்த வியாபாரிகள் அவற்றை பல மடங்கு விலையை உயர்த்தி விற்கின்றனர். விளைச்சல் அதிகரிப்பால் வியாபாரம் சூடுபிடித்துள்ளது.