சுடச்சுட

    

    ஒசூரில் கடந்த 25 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்ட உள்வட்டச் சாலையின் முதல் கட்டப் பணி முடிந்து 2-ஆம் கட்டப் பணி நடைபெற்ற நிலையில், தென் மேற்கு ரயில்வே நிர்வாகம், சாலையின் குறுக்கே கல்களை நட்டுச் சாலைப் பணியை நிறுத்தியதால், பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

    ஒசூரில் 1987-இல் உள்வட்டச் சாலைப் பணி, கிருஷ்ணகிரி சாலையில் தொடங்கி, ராயக்கோட்டை சாலை, ரயில் நிலையச் சாலை, தேன்கனிக்கோட்டை சாலை, தளி சாலை வழியாகப் பெங்களூர் சாலையை இணைக்கும் வகையில்  தொடங்கப்பட்டது.

    இத்திட்டத்தின் கீழ், தளி சாலைக்கும், தேன்கனிக்கோட்டை சாலைக்கும் இடையே ராயநாயக்கன் ஏரிக்கு அருகே பெரிய பாலங்கள் கட்டப்பட்டன. தொடர்ந்து, நிலம் கையகப்படுத்தும் பணியும் நடைபெற்றது.

    இந்தச் சாலை அமைக்க உள்ளாட்சி, வீட்டு வசதி வாரியம், ரயில்வே, பொதுப் பணி துறைகளுக்குச் சொந்தமான நிலம், தனியார் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதில் சிலர் நீதிமன்றங்களுக்கு சென்றதால், சாலை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது.

    மக்களுக்கு மிகவும் பயனுள்ளச் சாலைப் பணியை மீண்டும் செயல்படுத்த ஒசூர் எம்எல்ஏ கோ.கோபிநாத் சட்டப்பேரவையில் பலமுறை பேசியதால், தமிழக அரசு இந்த உள்வட்டச் சாலை அமைக்கும் பணியை மீண்டும் தொடங்கியது. முதல் கட்டமாக ரூ.12 கோடியில் தளியிலிருந்து பெங்களூர் சாலை வரை இணைப்புச் சாலை போடப்பட்டது.

    இரண்டாம் கட்டமாக, தளி சாலையிலிருந்து, தேன்கனிக்கோட்டை சாலை, ரயில் நிலையச் சாலை, ராயக்கோட்டை சாலை வழியாக கிருஷ்ணகிரிக்குச் செல்லும் சாலையை இணைக்கும் இந்த உள்வட்டச் சாலைப் பணி வேகமாக நடைபெற்றது. இந்தச் சாலைப் பணியை முடித்து விட்டால், கிருஷ்ணகிரியில் இருந்து ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை, ரயில் நிலையம், தளி ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்கள் உள்வட்டச் சாலை வழியாகச் சென்று விடலாம். இதனால், ஒசூர் நகருக்குள் வாகனங்கள் வரத் தேவையில்லை. இதன் மூலம், ஒசூர் நகருக்குள் போக்குவரத்து நெருக்கடி குறையும்.

    இந்த நிலையில், தேன்கனிக்கோட்டைச் சாலைக்கு அருகே உள்வட்டச் சாலையின் குறுக்கே தென் மேற்கு ரயில்வே நிர்வாகம் கல்லை நட்டு சாலையில் குறுக்கே வாகனங்கள் செல்லாமல் தடுப்புவேலி அமைத்து போக்குவரத்தை நிறுத்தியதுடன் சாலை அமைக்கும் பணியையும் நிறுத்தி விட்டது.

    இந்த இடம் ரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமானது எனவும், இதில் சாலை அமைக்க அனுமதியில்லை எனவும் அறிவிப்பு பலகை மூலம் தெரிவித்துள்ளது. இதனால், உள்வட்டச் சாலை அமைக்கும் பணி மீண்டும்  நிறுத்தப்பட்டது.

    பல முறை இந்தச் சாலை அமைக்கும் பணி நிறுத்தப்பட்ட நிலையில், இந்த முறை முடிந்துவிடும் என மக்கள் முழு நம்பிக்கையுடன் இருந்தனர். இந்த நிலையில், தற்போது மீண்டும் பணி நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு,  சாலை அமைக்கும் பணியை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai