சுடச்சுட

    

    குரூப் 2: முறைகேடுகளைத் தடுக்க தேர்வு மையங்களில் கண்காணிப்பு கேமரா

    By தருமபுரி/கிருஷ்ணகிரி  |   Published on : 29th November 2013 05:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

      தருமபுரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிச.1) நடைபெறும் குரூப் 2 தேர்வில் முறைகேடுகளைத் தடுக்க தேர்வு மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் தெரிவித்தார்.

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 2 தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் கே.விவேகானந்தன் பேசியது:

    தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் வட்டங்களில் உள்ள 49 பள்ளிகளில் 84 தேர்வு மையங்களில் நடைபெறும் குரூப் 2 தேர்வை 23,542 பேர் எழுதுகின்றனர்.

    தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    விண்ணப்பதாரர்கள் தேர்வு மையங்களுக்குள் கைபேசி, கால்குலேட்டர், எலெக்ட்ரானிக் கைக்கடிகாரம் ஆகியவை கொண்டு வரக் கூடாது.

    தேர்வு எழுதுவோர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மையங்களுக்கு காலை 9.30 மணிக்குள் வந்துவிட வேண்டும்.

    தேர்வு மையங்களில் முறைகேடுகள் நடைபெறுவதைக் தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தேர்வர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வு தொடர்பான தகவல்களை 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியைத் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.

    மாவட்ட வருவாய் அலுவலர் ப.ராமர், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) எச்.ரஹமத்துல்லாகான் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    பள்ளிகளுக்கு விடுமுறை

    குரூப் 2 தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் செய்ய வேண்டியுள்ளதால், தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி, மெட்ரிக் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு வருகிற சனிக்கிழமை (நவ.30) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி தெரிவித்தார்.

    கிருஷ்ணகிரியில்

    45 மையங்களில் தேர்வு

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 45 மையங்களில் நடைபெறும் டிஎன்பிஎஸ்சி குரூப் - 2 தேர்வை 12,955 பேர் எழுத உள்ளதாக மாவட்ட ஆட்சியர். மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி வட்டத்தில் உள்ள 29 மையங்களில் 8,226 பேரும், ஒசூர் வட்டத்தில் 14 மையங்களில் 4,260 பேரும், தேன்கனிக்கோட்டை வட்டத்தில் 2 மையங்களில் 469 பேர் என மொத்தம் 45 மையங்களில் 12,955 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

    தேர்வு எழுதுபவர்கள் தேர்வுக் கூடங்களுக்கு கைபேசி, கால்குலேட்டர் போன்ற மின்னணு சாதனங்கள் எடுத்துச் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது.

    மேலும், தேர்வுக் கூடங்களுக்கு அருகில் ஒலிப்பெருக்கி உபயோகிப்பது, பிரவுசிங் மையங்களில் சட்ட விரோதமாக தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமாகும் எனத் தெரிவித்தார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai