சாலைகளில் திரியும் கால்நடைகள் வனப் பகுதியில் விடப்படும்
சாலையில் கால்நடைகளைத் திரியவிட்டால், அவற்றைப் பிடித்து வனப் பகுதியில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிருஷ்ணகிரி நகர்மன்றத் தலைவர் எச்சரித்தார்.
கிருஷ்ணகிரி நகர்மன்றக் கூட்டம் அதன் தலைவர் கே.ஆர்.சி.தங்கமுத்து தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய உறுப்பினர்கள் கிருஷ்ணகிரி நகரில் சாலைகளில் திரியும் கால்நடைகளால் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. எனவே, சாலைகளில் கால்நடைகளைத் திரியவிடும் அவற்றின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
அதற்குப் பதில் அளித்த நகர்மன்றத் தலைவர், கடந்த வாரத்தில் மட்டும் சாலைகளில் திரிந்து 10-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பிடிக்கப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களுக்கு ரூ.11 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், கால்நடைகளை சாலைகளில் திரிய அவற்றின் உரிமையாளர்கள் அனுமதித்தால், அந்த கால்நடைகளைப் பிடித்து வனப் பகுதியில் கொண்டு விட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
நகராட்சியில் தெரு விளக்குகள் எரிவதில்லை; கழிவுநீர்க் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு, சாலையில் கழிவுநீர் பெருக்கெடுப்பதாக உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர். கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் கே.அசோக்குமாரை வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தும், கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உள்பட்ட பாரதி நகர், கிருஷ்ணகிரி தலைமை அரசு மருத்துவமனைக்கு எதிர்புறத்தில் உள்ள நகராட்சிக்குச் சொந்தமான இடத்திலும் "அம்மா' உணவகம் தொடங்க அனுமதிப்பது உள்ளிட்ட 60 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.