தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் போதைப்பொருள்கள் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே பேரணியை மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் தொடக்கிவைத்தார். கல்லூரி மாணவ, மாணவிகள், நுகர்வோர் அமைப்பினர், நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்கள் என 700 பேர் பங்கேற்றனர்.
மாவட்ட வருவாய் ஆய்வாளர் ப.பாலசுப்பிரமணியன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆறுமுகசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பர்கூரில் உன்னால் முடியும், மது, போதை விழிப்புணர்வு மையம் சார்பில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் பங்கேற்ற பேரணியை தலைமையாசிரியர் அகமது பாஷா தொடக்கிவைத்தார்.
ஊத்தங்கரை
ஊத்தங்கரையில் செஞ்சிலுவைச் சங்கம், இளையோர் செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவை சார்பில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணிக்கு பள்ளித் தலைமையாசிரியர் பி.பொன்னுசாமி தலைமை வகித்தார்.
டிஎஸ்பி பாஸ்கரன் பேரணியைத் தொடக்கிவைத்தார்.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்திய செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் மருத்துவர் வி.தேவராசு, உதவி ஆய்வாளர் அருள்முருகன், ஆசிரியர் கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தருமபுரி
தருமபுரி அரசு அதியமான் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் ப.ராமர் கொடியசைத்து தொடக்கிவைத்தார்.
இந்த பேரணி, நான்கு முனைச் சாலை சந்திப்பு, பேருந்து நிலையம், ராஜகோபால் பூங்கா, தலைமை அஞ்சல் அலுவலகம் சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.
உதவி ஆணையர் (ஆயம்) ரா.குப்புசாமி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.