Enable Javscript for better performance
நஷ்டஈடு வழங்காததால் 3 அரசுப் பேருந்துகள் ஜப்தி- Dinamani

சுடச்சுட

    

    ஒசூர் அருகே நடைபெற்ற விபத்து வழக்குகளில் நஷ்டஈடு வழங்காததால் 3 அரசுப் பேருந்துகள் வியாழக்கிழமை ஜப்தி செய்யப்பட்டன.

    கர்நாடக மாநிலம் ஒசகொட்டா அருகே உள்ள கனகலூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (23). இவர் கடந்த 5.8.1999-இல் ஒசூரில் இருந்து தின்னப்பள்ளிக்கு பேருந்தில் பயணம் செய்தார். தின்னப்பள்ளியில் பேருந்தில் இருந்து இறங்கும் முன் ஓட்டுநர் பேருந்தை எடுத்ததால் பேருந்து சக்கரத்தில் சிக்கி

    உயிரிழந்தார்.

    இந்த வழக்கில் நஷ்டஈடாக ரூ.5 லட்சத்து 22 ஆயிரத்து 469 வழங்க நீதிபதி சிவஞானம் உத்தரவிட்டார். ஆனால், நஷ்டஈடு தொகை வழங்கப்படாததால் அரசு நகரப் பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள குருபட்டியைச் சேர்ந்தவர் எல்லப்பா (38). விவசாயியான இவர் 16.7.2010-இல் குருபட்டியில் இருந்து ஒசூர் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றபோது ஒசூரில் இருந்து தேன்கனிக்கோட்டை நோக்கி சென்ற அரசுப் பேருந்து மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து மத்திகிரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஒசூர் சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கை விசாரித்த சார்பு நீதிபதி சிவஞானம், விபத்தில் எல்லப்பா இறந்ததற்கு நஷ்டஈடாக ரூ.8 லட்சத்து 80 ஆயிரம் வழங்க அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு உத்தரவிட்டார். ஆனால், நஷ்டஈடு தொகை வழங்கப்படாததால், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வட்டியுடன் ரூ.11 லட்சத்து 75 ஆயிரம் வழங்க உத்தரவிட்டார். நஷ்டஈடு வழங்காவிட்டால் 2 அரசுப் பேருந்துகளை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.

    இந்த 2 வழக்குகளின் தீர்ப்பின் அடிப்படையில் 3 பேருந்துகளை ஜப்தி செய்வதற்காக நீதிமன்ற ஊழியர்கள் குமார், கோவிந்தன், நாகராஜ் ஆகியோர் ஒசூர் பேருந்து நிலையத்துக்குச் சென்றனர். ஒசூரில் இருந்து பெங்களூருக்குச் செல்ல தயாராக இருந்த 2 அரசுப் பேருந்துகளையும், தாசிரிபள்ளிக்குச் செல்ல இருந்த நகரப் பேருந்தையும் ஜப்தி செய்தனர். ஒசூர் விபத்து வழக்குகளில் நஷ்டஈடு வழங்காததால் புதன்கிழமை ஒரு அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்ட நிலையில், வியாழக்கிழமை மேலும் 3 அரசுப் பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai