Enable Javscript for better performance
இனிக்குமா மாம்பழ ஏற்றுமதி?  விவசாயிகள் எதிர்பார்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    இனிக்குமா மாம்பழ ஏற்றுமதி?  விவசாயிகள் எதிர்பார்ப்பு

    By  கிருஷ்ணகிரி,  |   Published on : 28th January 2015 02:04 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஐரோப்பிய நாடுகளில் இந்திய மாம்பழங்களை விற்க தடை நீக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்றுமதிக்கான உள்கட்டமைப்பு வசதிகளை தமிழக அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
     காய்கறிகள், பழ வகைகள் சாகுபடி செய்வதில் தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம், முக்கிய இடம் வகிக்கிறது.
     கொய் மலர்கள், மாம்பழக் கூழ், கிரானைட் கற்கள் உள்ளிட்டவை இந்த மாவட்டத்திலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
     குறிப்பாக, ஏற்றுமதித் தரத்திலான மாம்பழங்கள், மாதுளை, பப்பாளி போன்ற பழ வகைகள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. ஏற்றுமதிக்கான சாலை, விமானப் போக்குவரத்து வசதிகள் இந்த மாவட்டத்தின் அருகே அமைந்துள்ள நிலையில், இங்கு சாகுபடி செய்யப்படும் பழ வகைகளை வெளிநாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்ய இயலாத நிலை உள்ளது.
     வெளிநாடுகளில் வரவேற்பை பெற்றுள்ள அல்போன்சா மாம்பழ ரகத்தையும் புதிய வேளாண் தொழில்நுட்பத்தின் மூலம் இந்த மாவட்ட விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
     தற்போது சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அல்போன்சா ரக மாம்பழங்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
     ஐரோப்பிய நாடுகளில் இந்திய மாம்பழங்களை விற்பதற்கான தடை நீக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்றுமதி செய்வதற்கான போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் விவசாயிகள், ஏற்றுமதியாளர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர்.
     மத்திய அரசின் நிறுவனம் அங்கீகரிக்கப்பட்ட தரக் கட்டுபாட்டு நிறுவனத்தில் பழங்களை சோதனை செய்து சான்றிதழ் பெற்ற பிறகே, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பழங்களைச் சோதனை செய்து சான்றளிக்கும் வகையில் மத்திய அரசின் அனுமதி பெற்ற நிறுவனங்கள் இல்லாதது பின்னடவை ஏற்படுத்துவதாக உள்ளது.
     மேலும், அறுவடை செய்ய அல்போன்சா மாம்பழங்களை பரிசோதிக்க வேண்டுமென்றால், கர்நாடக மாநிலம், மைசூருவில் உள்ள மத்திய அரசு நிறுவனத்தை கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. இங்கிருந்து பரிசோதனைக்கு அனுப்பப்படும் மாம்பழத்தின் தரம் குறித்த முடிவுகளை அறிய, சுமார் 10 நாள்கள் வரை விவசாயிகள் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால், அறுவடை செய்யப்பட்ட மாம்பழங்களை உரிய நேரத்தில் ஏற்றுமதி செய்ய முடியாத சூழ்நிலை உள்ளது.
     வெளிநாடு ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்து கிருஷ்மா அமைப்பின் திட்ட மேலாளர் சத்தியமூர்த்தி கூறியது:
     பெங்களூரு சர்வதேச விமான நிலையம் அருகே செயல்படும் தனியார் நிறுவனத்தில் ஏற்றுமதிக்கான பழ வகைகளில் உள்ள கிருமிகள் கதிர்வீச்சு மூலம் நீக்கப்படுகின்றன. இதுபோன்ற தர சோதனைக்கு உள்படுத்தப்படும் மாம்பழங்களை ஐரோப்பிய நாடுகளுக்கு மட்டுமல்லாமல், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கும் நேரடியாக ஏற்றுமதி செய்யலாம். இந்த கதீர்வீச்சு சோதனைக்கு குறைந்த செலவேயாகும். இதை இந்த மாவட்ட விவசாயிகள் பயன்படுத்தினால் 100 சதம் ஏற்றுமதி என்பது சாத்தியமாகும்.
     மேலும், பையூரில் செயல்படும் கோவை வேளாண் பல்கலைக்கழக ஆராய்ச்சி நிலையத்தில் தரமான பரிசோதனைக் கூடத்தை ஏற்படுத்த அரசு முன்வர வேண்டும் என்றார் அவர்.
     இதுபோன்ற வசதிகளை மேம்படுத்தினால், கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் மட்டுமன்றி, தருமபுரி, சேலம் மாவட்ட விவசாயிகள் பயன்பெறுவர். மேலும், ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai