Enable Javscript for better performance
வங்கியில் நகை திருட்டு சம்பவம்:  தனிப்படை போலீஸார் கர்நாடகம், ஆந்திரத்தில் முகாம்- Dinamani

சுடச்சுட

    

    வங்கியில் நகை திருட்டு சம்பவம்:  தனிப்படை போலீஸார் கர்நாடகம், ஆந்திரத்தில் முகாம்

    By  கிருஷ்ணகிரி,  |   Published on : 28th January 2015 02:03 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிருஷ்ணகிரி மாவட்டம், குந்தாரப்பள்ளி பேங்க் ஆப் பரோடா வங்கி கிளையில் 48 கிலோ தங்க நகைகள் திருடப்பட்டது தொடர்பாக தனிப் படை போலீஸார், கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் முகாமிட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.
     கிருஷ்ணகிரி அருகே குந்தாரப்பள்ளியில் பேங்க் ஆப் பரோடா வங்கி கிளையில் கடந்த சனிக்கிழமை அதிகாலை உள்ளே புகுந்த மர்ம நபர்கள், வங்கியின் பாதுகாப்புப் பெட்டகத்தில் இருந்த 6,033 பவுன் (48 கிலோ) தங்க நகைகளைத் திருடிச் சென்றனர்.
     இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களைப் பிடிக்க 10 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கோவை மண்டல காவல் துறைத் தலைவர் கி.சங்கர் தெரிவித்தார். மேலும், அவர் இரண்டு நாள்கள் கிருஷ்ணகிரியில் முகாமிட்டு, விசாரணையை துரிதப்படுத்தினார். இந்த நிலையில், குந்தாரப்பள்ளியில் நடைபெற்றதுபோல, கர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டத்தில் உள்ள காவிரி கிராம வங்கியின் சுவரை துளையிட்ட மர்ம நபர்கள் ரூ.6 கோடி மதிப்பிலான தங்க நகைகளைத் திருடிச் சென்றது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை போலீஸார் கர்நாடகத்துக்கு விரைந்து சென்றுள்ளனர். மேலும், ஆந்திரத்திலும் மற்றொரு தனிப் படையினர் முகாமிட்டு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
     வங்கி திறப்பு: கடந்த சனிக்கிழமை வங்கியில் தங்க நகைகள் திருடப்பட்டதை அடுத்து, செவ்வாய்க்கிழமை வங்கி மீண்டும் திறக்கப்பட்டது. இதை அறிந்த நூற்றுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வங்கியின் முன் குவிந்தனர். வங்கியில் அடமானம் வைத்துள்ள தங்களது நகைகள் திருடப்படாமல் உள்ளதா என்பது குறித்து வங்கி அலுவலர்களிடம் கேட்டனர்.
     இதற்கு, அங்கிருந்த கோவை மண்டல துணைப் பொது மேலாளர் சின்னசாமி கூறியது:
     வங்கியில் அடமானம் வைத்த வாடிக்கையாளர்கள் 1,079 பேரின் நகைகள் பத்திரமாக உள்ளன. இவர்கள் விருப்பப்பட்டால் நகைக்கான கடன் தொகையை திரும்பச் செலுத்தி நகையை மீட்டுக் கொள்ளலாம். திருட்டுப்போன நகைகளின் வாடிக்கையாளர்கள் கடன் தொகையை திருப்பிச் செலுத்தினால் அவர்களின் கணக்குகள் சரிபார்க்கப்பட்டு, நகையின் மதிப்பில் பணமாகவோ அல்லது தங்கமாகவோ திருப்பி வழங்கப்படும். நகைகள் மீட்கப்பட்டால், வாடிக்கையாளர்களுக்கு நகையாகத் தரப்படும். இதுகுறித்து மேலிட அலுவலர்களின் ஆலோசனையின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, வாடிக்கையாளர்கள் வங்கியின் நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
     இந்த நிலையில், தங்களது நகைகள் திருடப்பட்டதை அறிந்த சில வாடிக்கையாளர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
     வங்கி திறக்கப்பட்டதை அடுத்து, கிருஷ்ணகிரி துணைக் காவல் கண்காணிப்பாளர் சந்தான பாண்டியன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
     வங்கிக்கு தனிக் கட்டடம்: குந்தாரப்பள்ளி பாங்க் ஆப் பரோடா வங்கியின் கிளை பாதுகாப்பற்ற நிலையில் செயல்பட்டு வரும் நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே வங்கி கிளையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என கிராம மக்கள் வங்கி நிர்வாகத்தை வலியுறுத்தி வந்தனர். இதற்கு, 1,200 சதுர அடியில் நிலம் ஒதுக்குமாறு வங்கி நிர்வாகம் கிராம மக்களை கேட்டதாகக் தெரிகிறது. இதையடுத்து, கிராம மக்கள் 2,000 சதுர அடி நிலத்தை வங்கிக்காக ஒதுக்கி, கடந்த 3 ஆண்டுகளாகக் காத்திருக்கின்றனர். ஆனால், வங்கி நிர்வாகம் புதிய இடத்துக்கு வங்கியை மாற்றுவதற்கான எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். தற்போது வங்கியில் நகைகள் திருடப்பட்ட நிலையில், பொதுமக்கள் இலவசமாக அளிக்கும் இடத்தில் வங்கிக்கு புது கட்டடம் கட்ட வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai