Enable Javscript for better performance
உயர் கல்வி கட்டமைப்புக்கு நடவடிக்கை தேவை!- Dinamani

சுடச்சுட

  

  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு வரை கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை (தனி) ஒசூர், தளி என 5 தொகுதிகள் இருந்தன. கடந்த தேர்தலின்போது, மறுசீரமைப்பு செய்யப்பட்டதில் 6 ஆவது தொகுதியாக உருவாக்கப்பட்டது. ஆந்திரம் மற்றும் கர்நாடக மாநில எல்லையும், அதிக வனப் பகுதிகளைக் கொண்ட இந்த தொகுதியானது நகராட்சி, பேரூராட்சி என நகர்ப்புறங்களே இல்லாத தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

  புதியதாக உருவாக்கப்பட்ட இந்தத் தொகுதியில் மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். 

  தமிழ், தெலுங்கு, கன்னடம், உருது என 4 மொழிகள் பேசும் மக்கள் வசிக்கும் இந்தத் தொகுதியில் வளர்ச்சிக்கான தொழிற்சாலைகள் ஏதும் இல்லை. விவசாயமே முக்கிய தொழிலாக இருந்தபோதிலும், போதிய பாசன வசதி இல்லாததால், விவசாயம் பரப்பளவு படிப்படியாகக் குறைந்து வருகிறது.

  அரசால் அறிவிக்கப்பட்ட ஜீனூர் என்னுமிடத்தில் 400 ஏக்கர் பரப்பளவில் தோட்டக்கலை பல்கலைக்கழகம், ரூ. 14 கோடி மதிப்பில் சிங்கிரிப்பள்ளி அணைத் திட்டம், கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போலுப்பள்ளி என்னுமிடத்தில் 90 ஏக்கரில் சிப்காட் வளாகம், போலுப்பள்ளியில் கிருஷ்மா என பெயரிடப்பட்ட மாம்பழக் கூழ் ஏற்றுமதி மையம் உள்ளிட்ட பல திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

  இதேபோல், தொகுதியில் பாயும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே முத்தாலி, அளியாளம், சுபகிரி ஆகிய 3 இடங்களில் சிறு தடுப்பணைகள் கட்டி, கால்வாய் வெட்டி, சுமார் 200 ஏரிகளுக்கு தண்ணீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

  வனவிலங்குகளில் இருந்து பாதுகாப்பு: வனப்பகுதி நிறைந்த பகுதி என்பதால், யானைகள் தொந்தரவு அதிக அளவில் உள்ளது. ஊடேதுர்க்கம், சானமாவு, சூளகிரி, மகராஜகடை ஆகிய பகுதிகளையொட்டி உள்ள வனப் பகுதியிலிருந்து வெளியேறும் யானைகள் கூட்டம் கூட்டமாக வெளியேறி, விளை நிலங்களைச் சேதப்படுத்தி வருகின்றன. சில நேரங்களில் இந்த யானைக் கூட்டத்தால் மனித உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

  சானமாவு வனப்பகுதியில் யானைகள் சரணாலயம் அமைத்திட வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட காலமாகவே உள்ளது.

  இந்த தொகுதியில் உள்ள ராயக்கோட்டை வளர்ந்து வரும் நகரமாகும். இங்கு ரயில் நிலையம், சார்-பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளன. கிராம ஊராட்சியாக உள்ள இங்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மட்டுமே உள்ளது. அதேபோல், உத்தனப்பள்ளி, அத்திமுகம் ஆகிய இடங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய அடிப்படை வசதி இல்லாத சூழல் காணப்படுகிறது. எனவே, இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை தரம் உயர்த்த வேண்டும். பேருந்து வசதி இல்லாத கிராமங்களுக்கு தரமான சாலைகள் அமைத்து பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும்.

  அரசுக் கல்லூரிகள் தேவை:

  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட இந்தத் தொகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் உள்ளன. வேப்பனஅள்ளி, ராயக்கோட்டை, கெலமங்கலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பள்ளிகளில் பயிலும் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களது உயர் கல்வியைத் தொடர முடியாத நிலை உள்ளது. இதற்கு காரணம் இந்தத் தொகுதியில் அரசுக் கலைக் கல்லூரியோ, பொறியியல் கல்லூரியோ, தொழில்நுட்பக் கல்லூரியோ இல்லாததே. ஆந்திர மாநிலம், குப்பத்தில் உள்ள திராவிடர் பல்கலைக் கழகமானது வேப்பனஅள்ளிக்கு மிக அருகே அமைந்துள்ளது. இருந்தபோதிலும், இந்த பல்கலைக்கழகத்துக்கு செல்ல சாலை வசதி இல்லை.

  தாகம் தீர்க்காத ஒகேனக்கல் குடிநீர்: இந்தத் தொகுதியில் பாயும் ஆறுகள், ஏரிகள் முற்றிலும் வறண்டதால் மக்கள் குடிநீருக்காக அலையும் நிலை உள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட மக்களின் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க தொடங்கப்பட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், இந்தத் தொகுதியில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் நிறைவேற்றப்படவில்லை என்கின்றனர் இந்த தொகுதி மக்கள்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai