Enable Javscript for better performance
சொன்னதும் செய்ததும்...(டி.செங்குட்டுவன். சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர், வேப்பனஅள்ளி)- Dinamani

சுடச்சுட

    

    சொன்னதும் செய்ததும்...(டி.செங்குட்டுவன். சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர், வேப்பனஅள்ளி)

    By dn  |   Published on : 15th April 2016 06:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஅள்ளி சட்டப்பேரவைத் தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் பற்றியும், நிறைவேற்ற முடியாததால் ஏற்பட்ட ஏமாற்றங்கள் குறித்தும் விவரிக்கிறார் கிருஷ்ணகிரி மாவட்ட திமுக (கிழக்கு) அவைத் தலைவர் டி. செங்குட்டுவன் எம்.எல்.ஏ.

    இந்த தொகுதிக்கு கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளேன்.

    நிறைவேற்றிய பணிகள்:

    2006-11-ஆம் ஆண்டில் குந்தாரப்பள்ளி - பேரிகை, குருபரப்பள்ளி - சின்னகொத்தூர் உள்ளிட்ட பிரதான சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டன. வேப்பனஅள்ளி, ராயக்கோட்டை, சூளகிரி ஆகிய இடங்களில் பேருந்து நிலையம் அமைக்கும் பணி, வேப்பனஅள்ளியில் இரு பாலரும் சேர்ந்து படிக்கும் பள்ளியாக இருந்த அரசு மேல்நிலைப் பள்ளியானது பிரிக்கப்பட்டு, ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.5 கோடி மதிப்பில் புதிய வகுப்பறைக் கட்டடங்கள் கட்டியது, சின்னகொத்தூரில் ரூ.3 கோடி மதிப்பில் துணை மின் நிலையம் அமைத்தது. குப்பச்சிப்பாறை, சின்னகொத்தூரில் புதிய கால்நடை மருத்துவமனைகள் அமைத்தது என திட்டங்கள் நிறைவேற்றப்பட்டாலும், 2011- 2016 வரையிலான 5 ஆண்டுகளில் சூளகிரியில் புதிய வட்டார வளர்ச்சி அலுவலகம் தொடங்கப்பட்டது. 20 ஆண்டுகளுக்கு முன்பு உடைந்த காளிங்காவரம் ஏரியை ரூ.15 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்டது.

    மேலும்,  ரூ.60 லட்சம் மதிப்பில் நூற்றுக்கணக்கான பள்ளிகளில் சுற்றுச் சுவர் கட்டப்பட்டது. மின்விளக்கு இல்லாத பகுதிகளில் ரூ.50 லட்சம் மதிப்பில் சூரிய மின்சக்தி மூலம் மின்விளக்கு வசதி ஏற்படுத்தியது. மின் சிக்கனத்தை கருத்தில் கொண்டு 20 ஊராட்சிகளில் ரூ.25 லட்சம் மதிப்பில் எல்.இ.டி. பல்புகள் வழங்கியது. பள்ளி குழந்தைகளுக்கு  ஆரம்ப, நடுநிலை, உயர் நிலைப் பள்ளிகளில் சுகாதாரமான குடிநீர் வசதி மேற்கொள்ளப்பட்டது.

    பில்லனகுப்பத்தில் கட்டி முடிக்கப்பட்டும் செயல்படுத்தாமல் இருந்த அரசு மாதிரிப் பள்ளியை நீண்ட போராட்டத்துக்கு பிறகு செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தது. சட்டப் பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 90 சத கிராமச் சாலைகளை மேம்படுத்தினேன்.  பல்வேறு கிராமங்களில் புதிய நியாயவிலைக் கடைகள் திறக்கப்பட்டன. ரூ.50 லட்சம் மதிப்பில் பல்வேறு இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டன. தொகுதி முழுவதும் அங்கன்வாடி மையங்களில் ரூ.50 லட்சம் மதிப்பில் எரிவாயு வசதி மேம்படுத்தப்பட்டது. சூளகிரி, வேப்பனஅள்ளி, காமன்தொட்டி ஆகிய இடங்களில் ரூ.15 லட்சம் மதிப்பில் உயர்மட்ட கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டன. பல கிராமங்களுக்கு புதிய பேருந்து வழித் தடங்களில் புதிய பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டது அல்லது நீட்டிக்கப்பட்டது என பல்வேறு பணிகளைச் செய்திருக்கிறேன்.

    ஏமாற்றமே....

    வேப்பனஅள்ளி தொகுதியில் மேல்நிலை வகுப்பு வரையில் படிக்கும் மாணவ, மாணவிகள் உயர் கல்வியைத் தொடர அரசு கலைக் கல்லூரி, பொறியியல் கல்லூரி அல்லது தொழில் நுட்பக் கல்லூரி தொடங்கப்படாதது ஏமாற்றத்தைத் தருகிறது. பொது மக்கள் வசதிக்காக 2012-ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட சட்டப் பேரவை உறுப்பினர் அலுவலகத்தை பலமுறை கேட்டும், சட்டப் பேரவையில் பேசியும் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர முடியவில்லை.

    விவசாயிகள் மற்றும் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே எண்ணெக்கோல் புதூரில் தடுப்பணை கட்டி, பெரிய ஏரிக்கு தண்ணீர் கொண்டுவரும் திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் போனது. முத்தாலி ஆளியாளம், சுபகிரி, ஆகிய தடுப்பணைத் திட்டங்கள், சிங்கிரிப்பள்ளி அணைத் திட்டம், கடந்த திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட தோட்டக்கலைப் பல்கலைக்கழகம் தொடங்கப்படாதது ஏமாற்றத்தை அளிக்கிறது.

    மேலும், ராயக்கோட்டை, சூளகிரி, வேப்பனஅள்ளி, ஒசூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள உயர்கல்வி வரையில் படித்த கிராம மக்கள் வேப்பனஅள்ளிக்கு அருகே உள்ள ஆந்திர மாநிலம், குப்பத்தில் உள்ள திராவிடர் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து கல்வியைத் தொடர போதிய சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

    அனைத்து கிராமங்களிலும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படாதது. யானை போன்ற வன விலங்குகளிடமிருந்து பயிர்களைக் காக்கவும், மனித உயிர்களைக் காக்கவும் சானமாவு காட்டில் யானைகள் சரணாலயம் அமைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை வலியுறுத்தி சட்டப் பேரவையில் பேசியும் நிறைவேற்ற முடியவில்லை என்கிறார் டி.செங்குட்டுவன்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai