ஒசூர் நகராட்சி மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் ராமநாயக்கன் ஏரி, தற்போது கழிவுநீர் தேங்கும் குட்டையாக மாறி வருகிறது. இதனால் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ராமநாயக்கன் என்ற மன்னரால் 156 ஏக்கர் நிலப்பரப்பில் ஒசூரின் மையப் பகுதியில் அமைக்கப்பட்ட ராமநாயக்கன் ஏரி மன்னரின் குதிரைப்படை, யானைப் படைகளுக்கு குடிநீர் ஆதாரமாக இருந்துவந்தது. இந்த ஏரிக்கு தளி பெரிய ஏரியில் இருந்து பேளகொண்டப்பள்ளி, பூனப்பள்ளி, மத்திகிரி கால்நடைப் பண்ணை வழியாக மழை நீர் வரும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், உபரி நீர் நகரின் வழியாக தர்கா ஏரி, வெங்கடேஷ் நகர் ஏரிக்கு செல்லும் வகையில் ராஜகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
ராமநகர் கோட்டையில் வசித்துவந்த மன்னர் சுற்றிலும் ஏரிகளை அமைத்து பாதுகாப்பாக ஆட்சி செய்து வந்தார். மிகவும் சிறப்பு வாய்ந்த ஏரியாக இருந்ததால், இந்த ஏரிக்கு அவருடைய பெயரையே வைத்து ராமநாயக்கன் ஏரி என பெயர் பெற்றது. இந்த ஏரி ஒசூர் சார்-ஆட்சியர் அலுவலகம் எதிரில் அமைந்துள்ளது.
ஆண்டு முழுவதும் இந்த ஏரியில் தண்ணீர் இருக்கும். மழைக் காலங்களில் ஏரி நிரம்பினால் ஒசூரில் உள்ள அனைத்துக் கிணறுகளிலும் ஊற்று சுரக்கும். தண்ணீர் பஞ்சம் என்பதே ஒசூரில் இருந்தது இல்லை.
இந் நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக தளி ஏரியில் இருந்து ஒசூர் ராமநாயக்கன் ஏரிக்கு வரும் ராஜகால்வாய் முழுமையாகத் தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 10 ஆண்டுகளாக ஏரிக்கு தண்ணீர் வரத்தின்றி வறண்டு கிடக்கிறது.
வறண்டு கிடக்கும் ராமநாயக்கன் ஏரிக்கு கெலவரப்பள்ளி அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து நிரப்ப வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந் நிலையில், மாவட்ட ஆட்சியராக இருந்த டி.பி.ராஜேஷ் ஏரிக்கரையைப் பலப்படுத்தி, நடைபாதை அமைத்து அழகுபடுத்தி ஏரியில் தண்ணீரை நிரப்பி படகு சவாரி விடும் திட்டத்தை ரூ.2 கோடியில் தொடக்கி வைத்தார். இதையடுத்து, ஏரிக்கரை பலப்படுத்தப்பட்டு, நடைபாதை அமைக்கப்பட்டது. ஆனால், ஏரியில் தண்ணீர் நிரப்பவில்லை. இதனால் இத் திட்டம் பாதியிலேயே கைவிடப்பட்டது.
இவ்வளவு சிறப்புமிக்க இந்த ஏரி தற்போது வறண்டு கிடக்கும் நிலையில், ஒசூர் ஏரித் தெருவில் உள்ள கழிவுநீர் முழுவதும் ராமநாயக்கன் ஏரிக்குத் திருப்பி விடப்பட்டுள்ளது. மேலும், ஏரித்தெருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்ள துணிகளைத் துவைக்கும் இடமாக மாறி வருகிறது. மேலும் திடக் கழிவுகளைக் கொட்டி ஏரியை முழுமையாக மூடும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
கெலவரப்பள்ளி அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து நிரப்பி இந்த ஏரியைக் காக்க ஒசூர் சார்-ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒசூர் நகராட்சி முன்னாள் தலைவர் எஸ்.ஏ.சத்யா மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.