Enable Javscript for better performance
ஒசூர் அருகே இரட்டை யானைகள் அட்டகாசம்- Dinamani

சுடச்சுட

    

    ஒசூர் அருகே சானமாவு காட்டுக்கு மேலும் ஒரு யானை வந்ததையடுத்து விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே சானமாவு வனப் பகுதிக்கு அடிக்கடி யானைகள் வருகின்றன. இந்த யானைகள் இரவு நேரங்களில் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதம் செய்து வருகின்றன.
    இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் தேன்கனிக்கோட்டை வனப் பகுதியில் இருந்து ஒற்றை யானை, சானமாவு காட்டுக்கு வந்தது. பகலில் காட்டில் இருக்கும் அந்த யானை இரவு நேரத்தில் அருகில் உள்ள பீர்ஜேப்பள்ளி, உத்தனப்பள்ளி, உப்பரத்தமண்டரப்பள்ளி, பென்னிக்கல் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களுக்குச் சென்று விவசாயப் பயிர்களை நாசம் செய்து வந்தது.
    இந்த யானையை விரட்ட வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் வனத்துறைக்கு கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில், ஊடேதுர்க்கம் வனப்பகுதியில் இருந்து மேலும் ஒரு யானை சானமாவு வனப்பகுதிக்கு வந்ததையடுத்து, தற்போது சானமாவு காட்டில் 2 யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் இரவு நேரங்களில் கிராமங்களுக்குள் சென்று விவசாயப் பயிர்களை சேதப்படுத்தும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    இந்த யானைகளை ஊடேதுர்க்கம் வனப்பகுதி வழியாக ஜவளகிரி காட்டுக்கு விரட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது சானமாவு காட்டில் 2 யானைகள் இருப்பதால் விவசாயிகள் யாரும் ஆடு, மாடுகளை மேய்ப்பதற்காக வனப்பகுதியையொட்டி யாரும் செல்ல வேண்டாம் என வனத் துறையினர் எச்சரித்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai