Enable Javscript for better performance
ஒசூர் வனப் பகுதிக்குள் நுழைந்த 30 யானைகளால் விவசாயிகள் அதிர்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    ஒசூர் வனப் பகுதிக்குள் நுழைந்த 30 யானைகளால் விவசாயிகள் அதிர்ச்சி

    By ஒசூர்,  |   Published on : 15th October 2016 11:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராகி சாகுபடி தொடங்கி உள்ளதால், பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து தேவர்பெட்டா வழியாக ஒசூர் வனப் பகுதிக்குள் 30-க்கும் மேற்பட்ட யானைகள் வந்துள்ளதால் விவசாயிகள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
     கர்நாடக மாநிலம், பன்னார்கட்டாவில் வன உயிரியல் பூங்காவில் ஏராளமான யானைகள் உள்ளன. ஆண்டுதோறும் அக்டோபர் மாத இறுதியில் பன்னார்கட்டா வனப் பகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் ஜவளகிரி வனப்பகுதி வழியாக தேன்கனிக்கோட்டை, ஒசூர் வனப் பகுதிக்குள் நுழைவது வழக்கம்.
     ராகி பயிர் அறுவடையைக் குறி வைத்து வரக்கூடிய இந்த யானைகள், சுமார் 4 மாதங்கள் இந்த பகுதியில் முகாமிட்டு விவசாயப் பயிர்களை நாசம் செய்வது தொடர்ந்து வருகின்றன. இந்த காலக்கட்டங்களில் யானைகள் தாக்கி பொதுமக்கள் சிலர் பலியான சம்பவங்களும், அதே போல கிராமத்துக்குள் வரும் யானைகள் ரயில் மோதியும், வாகனங்கள் மோதியும், கிணற்றில் தவறி விழுந்து இறந்த சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன.
     இந்த ஆண்டு ஒசூர், தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் வழக்கம் போல ராகி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இதை குறி வைத்து யானைகள் கூட்டம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து ஒசூர் வனப்பகுதிக்குள் எந்த நேரமும் நுழைய வாய்ப்புள்ளதால் மாவட்ட வன அலுவலர் ராஜேந்திரன் உத்தரவுப்படி, வனத் துறையினர் யானைகள் வரக்கூடிய பாதை பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
     யானைகள் வராமல் இருக்க அகழிகள் வெட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில், பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து தேவர்பெட்டா வழியாக ஒசூர் வனப்பகுதிக்குள் 30-க்கும் மேற்பட்ட யானைகள் வெள்ளிக்கிழமை நுழைந்துள்ளதால் விவசாயிகள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த யானைகளை உடனடியாக கர்நாடக மாநிலத்துக்கு விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
     இதற்கிடையே ஒசூர் அருகே சானமாவு காட்டில் முகாமிட்டுள்ள 2 யானைகளும், தொடர்ந்து இரவு நேரத்தில் அருகில் உள்ள கிராமங்களுக்குள் சென்று பயிர்களை நாசம் செய்வது தொடர்ந்து வருகிறது. இந்த 2 யானைகளையும் விரட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai