Enable Javscript for better performance
ராயக்கோட்டை அருகே கொலை செய்யப்பட்ட 2 பேரின் உடல்கள் தோண்டி எடுப்பு- Dinamani

சுடச்சுட

    

    ராயக்கோட்டை அருகே கொலை செய்யப்பட்ட 2 பேரின் உடல்கள் தோண்டி எடுப்பு

    By ஒசூர்,  |   Published on : 15th October 2016 11:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராயக்கோட்டை அருகே கொலை செய்யப்பட்ட 2 பேரின் உடல்களை ஆய்வுக்காக போலீஸார் மற்றும் மருத்துவக் குழுவினர் வெள்ளிக்கிழமை தோண்டி எடுத்தனர்.
     கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே உள்ள நல்லூரைச் சேர்ந்தவர் சுகுமார். இவரது மனைவி வள்ளி. இவர்களுக்கு ஜீவா, பூஜா என்ற 2 குழந்தைகள் இருந்தனர். அவர்கள் வீட்டின் அருகில் சுகுமாரின் மாமியார் கோவிந்தம்மாள் வசித்து வருகிறார்.
     இந்த நிலையில், கடந்த அக்.3-ஆம் தேதி குழந்தைகள் 2 பேர் மற்றும் பக்கத்து வீட்டில் வசிக்கும் முதியவர் முனியப்பன் (90) ஆகியோருக்கு கோவிந்தம்மாள் உணவு தயாரித்துக் கொடுத்தாராம். அதை உண்ட அவர்கள் மூவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதில் முதியவர் முனியப்பன் மற்றும் பூஜாவின் உடல்கள் தகனம் செய்யப்பட்டன.
     இந்த நிலையில், 3 பேர் அடுத்தடுத்து மரணம் அடைந்ததால் சந்தேகம் அடைந்த ராயக்கோட்டை போலீஸார், அது தொடர்பாக விசாரணை நடத்தினர். அதில் கோவிந்தம்மாளின் கணவர் முத்தன் இறந்ததும், அவரது தம்பி முருகன் (42) சொத்துப் பிரச்னையில் கோவிந்தம்மாளை கொலை செய்வதற்காக கோதுமை மாவில் விஷம் கலந்ததும், அது தெரியாமல் கோவிந்தம்மாள் அந்த மாவில் உணவு செய்து கொடுத்ததால் 2 குழந்தைகள் உள்பட 3 பேரும் இறந்ததும் தெரியவந்தது.
     இதையடுத்து, முருகனை ராயக்கோட்டை போலீஸார் கைது செய்தனர். சிறுவன் ஜீவா தருமபுரி அரசு மருத்துவமனையில் உயிரிழந்ததால், அவரது உடல் அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில் விஷம் கலந்த உணவை சாப்பிட்டதால் சிறுவன் ஜீவா உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், தருமபுரி பிரேத பரிசோதனை மருத்துவர் தண்டர்சீப், கிருஷ்ணகிரி மருத்துவர் அருண்குமார் மற்றும் மருத்துவக் குழுவினர் வெள்ளிக்கிழமை ராயக்கோட்டை அருகே உள்ள நல்லூருக்கு
     வந்தனர்.
     அங்கு தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர் ராமகிருஷ்ணன், ராயக்கோட்டை ஆய்வாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் தகனம் செய்யப்பட்ட முனியப்பன் மற்றும் பூஜா ஆகியோரின் உடல்களின் எலும்புகள், சாம்பல், மண் ஆகியவற்றை தோண்டி எடுக்கப்பட்டன. பிறகு அவற்றை உடல்கூறு ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai