கிருஷ்ணகிரி அருகே மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கிராமத்தில் சுகாதாரத் துறையினர் முகாமிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சுண்டேகுப்பம் ஊராட்சிக்குள்பட்டது பொன்னியம்மன் கோவிலூர் கிராமம். இந்தக் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த ஒரு மாதமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சுகாதாரத் துறை அலுவலர்கள் பாதிக்கப்பட்ட கிராமத்துக்கு சென்று, காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகளை சேகரித்தனர். தொடர்ந்து அனைவருக்கும் நிலவேம்புக் கசாயம் வழங்கிருகின்றனர்.
இதுகுறித்து சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பிரியாராஜ் தெரிவித்தது: மர்மக் காய்ச்சல் பாதிக்கப்பட்ட தகவல் அறிந்த உடன் எங்கள் மருத்துவக் குழுவினர் அந்த கிராமத்துக்குச் சென்று ஆய்வு செய்தனர். அதில் 4 பேருக்கு மட்டும் தொடர்ந்து காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. அதில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவருக்கு டைபாய்டு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இருந்த போதிலும், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 பேரின் ரத்த மாதிரிகளை சேகரித்து, ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆய்வு முடிவு வெள்ளிக்கிழமை கிடைக்கும். எங்கள் மருத்துவக் குழுவினர் அந்த கிராமத்தில் தொடர்ந்து முகாமிட்டு, காய்ச்சல் பரவாமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகின்றனர். அந்தக் கிராமத்தில் டெங்கு காய்ச்சல் கண்டிப்பாக இல்லை. எனவே, பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டியதில்லை என தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.