கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 13,800 விவசாயிகளுக்கு ரூ.8906 லட்சம் கடன் தள்ளுபடி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறுகுறு விவசாயிகள் 13, 853 பேரின் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி தெரிவித்தார்.
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறுகுறு விவசாயிகள் 13, 853 பேரின் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் 64-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி கூட்டுறவு சங்கக் கொடி ஏற்றி வைத்து சிறந்த கூட்டுறவுச் சங்கங்களுக்கு கேடயங்கள், கடனுதவிகள் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகளை வழங்கினார்.
விழாவில் மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன் தலைமையும், கிருஷ்ணகிரி எம்.பி. அசோக்குமார், ஊத்தங்கரை எம்எல்ஏ மனோரஞ்சிதம், தருமபுரி கூட்டுறவு வங்கித் தலைவர் கேசவன் ஆகியோர் முன்னிலையும் வகித்தனர்.  விழாவில் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி பேசியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 456 கூட்டுறவுச் சங்கங்களில் கிருஷ்ணகிரி மாவட்ட சிறு, குறு விவசாயிகளின் பயிர்க் கடன், மத்திய கால வேளாண் கடன் மற்றும் நீண்டகால பயிர்க் கடன்கள் என மொத்தம் 13,853 விவசாயிகளின் அசல் மற்றும் வட்டியுடன் சேர்த்து ரூ. 8906. 99 லட்சம் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
10 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில் விவசாயிகளுக்குத் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல தற்போது நீர் நிலைகளான ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.
பின்பு சிறந்தக் கூட்டுறவுச் சங்கங்களாகத் தேர்வு செய்யப்பட்ட 62 சங்கங்களுக்கும், சிறந்த விற்பனையாளர்களுக்கும் கேடயங்கள் வழங்கினார்.
 நிகழ்ச்சியில் 665 பயனாளிகளுக்கு கறவை பசு வளர்ப்பு, மளிகைக் கடை, சிறுத் தொழில், பயிர்க் கடன் மற்றும் பயிர்க் காப்பீடு என மொத்தம் ரூ. 532 லட்சம் மதிப்பில் கடன் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும்,  கூட்டுறவுத் துறை சார்ந்த பணியாளர்களின் குழந்தைகளில் 10, 12 -ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்குப் பரிசுகளும், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளும் அமைச்சர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாநில நிலவள வங்கித் தலைவர் பா. சாகுல் அமீது, தருமபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் எஸ். தென்னரசு, துணைப் பதிவாளர்கள் ரவிச்சந்திரன், கிருஷ்ணன், வெ. நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com