ஊத்தங்கரை ஸ்ரீமகா முனியப்பன் சுவாமி கோயில் திருவிழா வெகு சிறப்பாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆண்டுதோறும் ஆடி 18-க்கு அடுத்து வரும் செவ்வாய்க்கிழமையில் ஊத்தங்கரை ஸ்ரீமகா முனியப்பன் சுவாமி திருவிழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு செவ்வாய்க்கிழமை (ஆக.7) அதிகாலை ஸ்ரீ விநாயகர், மகா முனியப்பன் சுவாமிக்கு சிறப்பு அலங்கார அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் கரகம், வேல் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி தரிசனம் செய்தனர். இதில் ஆயிரக்கணக்கான ஆடு, கோழிகளை பலியிட்டு வேண்டுதலை நிறைவேற்றினர். கோயில் தர்மகர்த்தா சிவசக்தி சண்முகம், ஆலோசகர் சி.எ.கே. சந்திரன், கொங்கு அறக்கட்டளை தலைவர் திருஞானம், பொருளாளர் கருப்புசாமி, செயலாளர் வழக்குரைஞர் ஆர்.எஸ்.கே.செல்வகுமார், ஏ.ஆர்.எஸ்.ராஜி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை கொங்கு இளைஞர்அணி மற்றும் ஸ்ரீமகா முனியப்பன் கொங்கு அறக்கட்டளையினர் செய்திருந்தனர். ஊத்தங்கரை காவல் துணைக் கண்கானிப்பாளர் அர்ஜூனன், காவல் ஆய்வாளர் ராமமூர்த்தி மற்றும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர், ஊத்தங்கரை கொங்கு இளைஞர் அணி சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.