முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதி செவ்வாய்க்கிழமை மறைந்ததையொட்டி தமிழக அரசுப் பேருந்துகள் இயக்கப்படாமல் பணிமனைக்கு திரும்பின. இந்த நிலையில் கர்நாடக மாநில அரசுப் பேருந்துகளும் இயங்காததால் பயணிகள் பெரும் அவதியுற்றனர்.
தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு தினசரி ஆயிரக்கணக்கானோர் வேலைக்கும், வியாபாரத்திற்கும் சென்று வருகின்றனர். ஒரு நிமிடத்துக்கு ஒரு பேருந்து என்ற அளவில் 24 மணி நேரமும் தமிழகத்தின் எல்லையான ஒசூரில் இருந்து கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருக்கு சென்று வருகின்றன.
அதேபோன்று கர்நாடக மாநிலத்தில் இருந்தும் தமிழகத்திற்கு கர்நாடக மாநில மக்கள் வந்து செல்வதுண்டு. முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி செவ்வாய்க்கிழமை மாலை மறைந்ததையொட்டி ஒசூர் பேருந்து நிலையத்திற்கு வந்த தமிழக அரசுப் பேருந்துகள் இயக்கப்படாமல் பணிமனைக்கு திருப்பி விடப்பட்டன.
கர்நாடக மாநிலத்தில் இருந்து தினசரி இயக்கப்பட்டு வரும் 800 கர்நாடக மாநில பேருந்துகளும் இயக்கப்படவில்லை. இதனால் இரு மாநிலத்தைச் சேர்ந்த பயணிகளும் ஒசூர் பேருந்து நிலையத்திற்கு காத்திருந்தனர். பின்னர் கர்நாடக மாநிலத்துக்கு செல்ல வேண்டிய பயணிகள் அத்திப்பள்ளி வரை ஆட்டோவில் சென்று அங்கிருந்து கர்நாடக மாநிலப் பேருந்துகளில் சென்றனர்.
அதேபோன்று கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வர வேண்டிய பயணிகள் அத்திப்பள்ளியில் இருந்து ஆட்டோ மூலம் வந்தனர். இதனால் ஆட்டோ கட்டணம் திடீரென உயர்ந்தது.
இதனால் பயணிகள் பெரும் அவதியுற்றனர்.