திமுக தலைவர் கருணாநிதி மறைந்ததையொட்டி கிருஷ்ணகிரியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. பேருந்து இயக்கம் படிப்படியாகக் குறைக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வயது மூப்பு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி செவ்வாய்க்கிழமை மாலை மறைந்தார். இதையடுத்து கிருஷ்ணகிரியில் பெங்களூரு சாலை, சென்னை சாலை, ராயக்கோட்டை சாலை, சேலம் சாலை, பழைய சப்-ஜெயில் சாலை, பழையப் பேட்டை, புறநகர் பேருந்து நிலையம், நகரப் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன.
போக்குவரத்து நிறுத்தம்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பணிமனைகளின் கீழ் இயக்கப்படும் பேருந்துகள் படிப்படியாகக் குறைக்கப்பட்டு, அந்தந்த பணிமனைகளுக்கு திருப்பி விடப்பட்டன. சேலம், தருமபுரி ஆகிய இடங்களில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. இரவு 8 மணிக்கு பின்னர் பெரும்பாலான பேருந்துகள் நிறுத்தப்பட்டன. நகரப் பேருந்துகள் படிப்படியாக இயக்குவது குறைக்கப்பட்டன. ஆனால், சில தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டன. கிருஷ்ணகிரியிலிருந்து இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் ரத்து செய்யப்பட்டன.
வேப்பனஅள்ளி அருகே சாலைகளில் டயர்களுக்கு தீ வைத்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதேபோல, ஒசூர் - ராயக்கோட்டை சாலையில் மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீஸார் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று தடைகளை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகளும் அடைக்கப்பட்டன. திரையரங்குகளில் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன. மேலும், பெட்ரோல் நிலையங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெட்ரோல் நிரப்பினர்.
அஞ்சலி: கிருஷ்ணகிரி வட்டச் சாலையில் கருணாநிதியின் உருவப் படத்துக்கு அந்தக் கட்சியினர் மாலை அணிவித்து சாலையில் அமர்ந்து அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் சாவித்திரி கடலரசு மூர்த்தி, இலக்கிய அணி அமைப்பாளர் நாராயணமூர்த்தி, முன்னாள் நகரச் செயலாளர் கிருஷ்ணன், முன்னாள் நகர்மன்ற தலைவர் பரிதா நவாப் மற்றும் உறுப்பினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அஞ்சலி செலுத்தினர்.