கிருஷ்ணகிரியில் ரூ.4.51 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகத்தை காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
கிருஷ்ணகிரி கட்டிகானப்பள்ளியில் மின்வாரிய துணை மின்நிலைய வளாகத்தில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம், ரூ.4.51 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கட்டடத்தை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார்.
இதையடுத்து, மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆட்சியர் சி.கதிரவன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் டி.செங்குட்டுவன், மனோரஞ்சிதம் நாகராஜ், மேற்பார்வைப் பொறியாளர் நந்தகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், குத்துவிளக்கேற்றி அலுவலர்கள், ஊழியர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
அவதானப்பட்டியில் செயல்பட்டு வரும் மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகத்திலிருந்து புதிய அலுவலகக் கட்டடத்துக்கு தளவாடப் பொருள்களை மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.
புதிய கட்டடத்தில் அலுவலகம் ஆகஸ்ட் 8-ஆம் தேதி முதல் செயல்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்தார்.