Enable Javscript for better performance
ஒசூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பிரபல ரெளடி வெட்டிக் கொலை- Dinamani

சுடச்சுட

    

    ஒசூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பிரபல ரெளடி வெட்டிக் கொலை

    By DIN  |   Published on : 18th May 2018 08:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஒசூர் அருகே வியாழக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் சென்ற பிரபல ரெளடியை காரில் வந்த கும்பல் வழிமறித்து, சாலையில் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.  கொலையாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே ஒட்டர்பாளையத்தைச் சேர்ந்தவர் சின்ன தாசப்பா மகன் வெங்கட்ராஜ் (30),  பிரபல ரெளடி. இவர் மீது 3 கொலை வழக்குகள் உள்ளன. வியாழக்கிழமை இரவு 8 மணி அளவில் இவர் ஒசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் காமன்தொட்டி அருகில் பாத்தகோட்டா பிரிவு சாலை அருகே தனது நண்பர்கள் 2 பேருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். 
    அப்போது,   காரில் பின்தொடர்ந்து வந்த சிலர்,  வெங்கட்ராஜ் மீது மோதினர்.  இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற வெங்கட்ராஜ் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.  அப்போது 4 பேர் கொண்ட கும்பல், வீச்சரிவாளால் வெங்கட்ராஜை வெட்ட முயன்றனர்.  அவர்களிடம் இருந்து தப்பிக்க வெங்கட்ராஜ் முயன்றார்.  ஆனாலும், அந்த கும்பல் விடாமல் வெங்கட்ராஜை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியது.  இதில் வெங்கட்ராஜூக்கு தலை, கை உள்பட உடலில் பல இடங்களில் வெட்டுக் காயமேற்பட்டு, உயிரிழந்தார். இதையடுத்து,  அவரது நண்பர்கள் 2 பேரும் தப்பி ஓடினர். அதில் ஒருவரை கொலையாளிகள் சுற்றி வளைத்து வெட்டினர்.  மற்றொருவர் தப்பியோடினார்.
    இந்த நிலையில்,  இக் கொலையை நேரில் பார்த்த பொதுமக்கள் சிலர் அவர்களை விரட்டிப் பிடிக்க முயன்றனர்.  அப்போது கொலையாளிகள் தாங்கள் வந்த காரை சாலையில் விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
     தகவலறிந்த ஒசூர் டி.எஸ்.பி. விஜய் கார்த்திக் ராஜ்,  சூளகிரி காவல் ஆய்வாளர் முருகன் மற்றும் போலீஸார் விரைந்து வந்து கொலையுண்ட வெங்கட்ராஜின் உடலை மீட்டனர். மேலும்,  வெங்கட்ராஜுடன் வெட்டுக் காயம் அடைந்த நண்பர் யார்?  அவர் உயிருடன் இருக்கிறாரா? அல்லது அவரும் கொலை செய்யப்பட்டாரா? என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சில ஆண்டுகளுக்கு முன் வெங்கட்ராஜின் தம்பி வெங்கட்ராமனையும், அவரது நண்பரையும் வெங்கட்ராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் சிலர் கடத்திச் சென்றனர்.  இதில் 2 பேரும் கொலை செய்யப்பட்டு, அவர்களது உடல்கள் வெவ்வேறு இடங்களில் வீசப்பட்டன.  இந்த இரட்டை கொலையில் வெங்கட்ராஜ் மற்றும் சிலர் மீது ராயக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
    அந்த இரட்டை கொலை வழக்கில் ஜாமீனில் வந்த வெங்கட்ராஜுக்கும்,  அவரது நண்பர் ஒருவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பிரச்னை வந்ததாம்.  இதில் அவரது நண்பரை வெங்கட்ராஜ் வெட்டிக் கொலை செய்தாராம்.  இவ்வாறு 3 கொலை வழக்குகளில் தொடர்புடைய வெங்கட்ராஜை பழிக்குப் பழியாக வெட்டிக் கொலை செய்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.   கொலைக்கு பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்த போலீஸார், காரின் பதிவு எண்ணை வைத்து கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai