ஒசூரில் காய்கறி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை

ஒசூரில் காய்கறிகளின் விலை வீழ்ச்சியால், அதனை உற்பத்தி செய்த விவசாயிகள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு கவலை அடைந்துள்ளனர்.

ஒசூரில் காய்கறிகளின் விலை வீழ்ச்சியால், அதனை உற்பத்தி செய்த விவசாயிகள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு கவலை அடைந்துள்ளனர்.
ஒசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, பாகலூர், பேரிகை, கெலமங்கலம், தளி, சூளகிரி, ராயக்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுமார் 500-க்கும் மேற்பட்ட கிராமங்களில், சுமார் 5 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் காய்கறிகள் பயிர் செய்யப்பட்டு வருகின்றன. 
தற்போது காய்கறிகளின் உற்பத்தி அதிகரித்துள்ளதால், அவற்றின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. தக்காளி ஒரு கிலோ ரூ.20 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒரு கிலோ தக்காளி ரூ.1 முதல் ரூ.3 வரை மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் தக்காளியைப் பறிக்காமல் நிலத்திலேயே விட்டு மாடுகளை மேய்க்க விடுகின்றனர். 
அதேபோல், பீன்ஸ் கிலோ ரூ.40 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு ஏக்கர் பீன்ஸ் நடவு செய்து அறுவடை வரை ரூ.1.5 லட்சம் செலவு செய்யப்படுவதாகவும், விலை வீழ்ச்சியால் ஒரு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.65 ஆயிரம் வரை மட்டுமே கிடைப்பதால் பெருமளவில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சூளகிரியைச் சேர்ந்த  விவசாயி முனிராஜ் தெரிவித்தார்.
அதேபோல், முட்டைகோஸ் ஒரு கிலோ ரூ.15 முதல் ரூ.30 வரை விற்பனை ஆகி வந்த நிலையில், ஒரு மூட்டை (100 கிலோ) ரூ.150-க்கும், சில்லறை விலையில் கிலோவுக்கு ரூ.2 முதல் ரூ.3 வரை மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இதனால் காய்கறி உற்பத்தி செய்த விவசாயிகள் பெருத்த நஷ்டம் அடைந்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com