விவசாயிகளால் அமைக்கப்பட்ட வாரச் சந்தை

விவசாயிகளால் அமைக்கப்பட்ட வாரச் சந்தை பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

விவசாயிகளால் அமைக்கப்பட்ட வாரச் சந்தை பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஊத்தங்கரையை அடுத்த கோவிந்தாபுரம் ஊராட்சி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் சுமார் 10-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமங்கள் முழுவதும் விவசாயத்தை முழுத் தொழிலாக கொண்ட பகுதியாகும். 
இப் பகுதியில் உள்ள விவசாய  நிலங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகளை ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை போன்ற பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வந்தனர். இப்பகுதியைச் சுற்றியுள்ள படத்தானூர், ஆண்டியூர், எக்கூர், கானம்பட்டி, பெரியதள்ளப்பாடி, கொம்மம்பட்டு, கெண்டிகானூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பகுதி மக்கள் வாரச் சந்தைக்கு செல்ல வேண்டும் எனில் 10 கி.மீ. தொலைவில் உள்ள ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டைக்கு தான் செல்ல வேண்டிய நிலை இருந்தது.
இந்த நிலையைக் கருதி, இப்பகுதி விவசாயிகள் ஒன்றிணைந்து கோவிந்தாபுரம் கிராமத்தில் சிங்காரப்பேட்டை-திருவண்ணாமலை சாலை அருகே செவ்வாய்க்கிழமை தோறும் வாரச் சந்தை அமைத்து தங்கள் விவசாய நிலத்தில் விளைவித்த காய்கறிகளை சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். 
காய்கறிகள் விவசாய நிலத்தில் இருந்து நேரடியாக சந்தைக்கு வருவதாலும், விலையும் சற்றுகுறைவாக உள்ளதாகவும், தரமான காய்கள் கிடைப்பதாகவும்  பொதுமக்கள் மகிழ்ச்சியோடு வந்து வாங்கி செல்கின்றனர்.
இது சம்பந்தமாக விவசாயி ஆறுமுகம் கூறியது: முழுக்க முழுக்க விவசாயிகளால் அமைக்கப்பட்ட இந்த வாரச்சந்தை குறித்து அரசு கவனம் செலுத்தி, உழவர் சந்தையாக அமைத்துக் கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும், இந்த வாரச் சந்தை பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com