முகநூலில் ஸ்டாலின் குறித்து அவதூறு: ஊராட்சி செயலர் பணியிடை நீக்கம்
By DIN | Published On : 01st April 2019 10:19 AM | Last Updated : 01st April 2019 10:19 AM | அ+அ அ- |

முகநூலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பிய கோலட்டி ஊராட்சி செயலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம் உள்பட்ட கோலட்டி ஊராட்சி செயலராக தர்மராஜா இருந்து வந்தார். இவர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்தும், தி.மு.க. குறித்தும் முகநூலில் விமர்சனம் செய்து வந்தாராம்.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலரும், தளி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஒய்.பிரகாஷ், மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகரிடம் புகார் செய்தார். அதன் பேரில், அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், தர்மராஜா முகநூலில் அவதூறு பரப்பியது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து, ஆட்சியர் உத்தரவுபடி தளி ஊராட்சி ஒன்றிய ஆணையர் சீனிவாசசேகர், கோலட்டி ஊராட்சி மன்றச் செயலர் தர்மராஜாவை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இது தொடர்பாக தளி ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் பேரில், தேன்கனிக்கோட்டை காவல் ஆய்வாளர் சரவணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.