"ஆட்சி மாற்றத்துக்கு காங்கிரஸுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்'

இந்தியாவில் ஆட்சி மாற்றத்துக்கு கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் செல்லகுமாருக்கு ஆதரவு

இந்தியாவில் ஆட்சி மாற்றத்துக்கு கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் செல்லகுமாருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என ஒசூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஏ.மனோகரன் தெரிவித்தார். 
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலர் ஒய்.பிரகாஷ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வேப்பன அள்ளி தொகுதி பொறுப்பாளர் பி.முருகன் வரவேற்றார்.
காங்கிரஸ் கட்சியின் தொகுதி பொறுப்பாளர் சஞ்சய்தத் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஏ.மனோகரன், இந்தியாவிலும், தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும். பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பாஜக அரசு அறிவித்த தேர்தல் அறிக்கையில் ஒன்றுகூட நிறைவேற்றவில்லை. பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. போன்ற திட்டங்களால் பொதுமக்கள், தொழில்துறையினர் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி வழியாக ஒசூரில் இருந்து ஜோலார்பேட்டைக்கு ரயில்பாதை அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றப்படும் என்றார். 
இந்தக் கூட்டத்தில் பேசிய தளி முன்னாள் எம்.எல்.ஏ. டி.ராமச்சந்திரன், பாரத பிரதமர் மோடி வெளிநாட்டில் பதுக்கி வைத்துள்ள பணத்தை மீட்டு,  ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவேன் என்றார். ஆனால் போட்டாரா எனக் கேள்வி எழுப்பினார். 
தளி எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ் பேசுகையில், இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் அவதியுற்று வருகின்றனர். பொருளாதாரம் சரிந்துவிட்டது. மக்களிடம் பணப்புழக்கம் குறைந்துவிட்டது. இதற்கு எல்லாம் பாஜக அரசுதான் காரணம். காங்கிரஸ் ஆட்சி வந்தால் மட்டுமே இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்கு செல்லும். எனவே, திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றார். 
இந்தக் கூட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலர் கனியமுதன், முன்னாள் எம்.பி. சுகவனம், வேப்பனஅள்ளி எம்.எல்.ஏ. பி.முருகன் உள்ளிட்டோர் பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com