நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும்:  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

நாடு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால், மீண்டும் மோடி பிரதமாக வரவேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார். 


நாடு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால், மீண்டும் மோடி பிரதமாக வரவேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார். 
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கே.பி.முனுசாமியை ஆதரித்து,  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை, மத்திகிரி, ஒசூர் தர்கா, ராயக்கோட்டை சந்திப்பு ஆகிய இடங்களில் திறந்த வேனில் ஞாயிற்றுக்கிழமை மாலை பிரசாரம் செய்தார்.  அப்போது அவர் பேசியது.  
இந்த தொகுதியில் போட்டியிடும் கே.பி.முனுசாமி இந்த மண்ணின் மைந்தர் ஆவார்.  ஆனால் அவரை எதிர்த்துப் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் இந்த பகுதியைச் சேர்ந்தவர் இல்லை.   இந்த நாடு பாதுகாப்பாக இருக்க வேண்டும்.  திட்டங்கள் மக்களுக்குச் சேர வலிமையான திறமையானவரை பிரதமராகத் தேர்வு செய்ய வேண்டும்.
நாடு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால்,  மீண்டும் நரேந்திர மோடி பிரதமராக வர வேண்டும்.  தி.மு.க. ஆதரிக்கும் கட்சி ஆட்சிக்கு வராது.  எதிர் அணியில் மு.க.ஸ்டாலின் மட்டும் தான் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என்று கூறுகிறார்.  ஆனால், கூட்டணியில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தேர்தலுக்கு பிறகு முடிவு செய்வோம் என்று கூறுகிறார்.  
 கேரளத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் எதிரெதிர் அணியில் உள்ளன.   அதே நேரத்தில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் கம்யூனிஸ்டு மற்றும் காங்கிரஸ் கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.  இதன் மூலம் ஸ்டாலின் கம்யூனிஸ்டு கட்சிக்கு ஆதரவா அல்லது காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவா என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். 
ராகுல் காந்தி பிரதமர் ஆனால் காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டப்படும் என்று கூறுகிறார்.  காவிரி ஆற்றை நம்பி தமிழ்நாட்டில் 20 மாவட்டங்கள் உள்ளன. இந்த நிலையில்,  ராகுல் காந்தி காவிரியின் குறுக்கே அணை கட்டுவேன் என்று கூறுவதால், தமிழகம் பாலைவனமாகும்.  அவ்வாறு மேக்கேதாட்டில் அணை கட்டினால் ரூ.2 ஆயிரம் கோடியில் செயல்படுத்தப்பட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தில், குடிநீர் கிடைக்காது. 
நானும் அதிமுக வேட்பாளரும்  விவசாயிகள் தாம். விவசாயிகள் பற்றி தெரிந்த எங்களுக்கு விவசாயத்திற்கு நீர் கொடுப்பது எங்கள் கடமையாகும்.  தென்பெணணை ஆறு மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரி, குளங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.
குறிப்பாக,  ராயக்கோட்டை பகுதியில் உள்ள ஏரிகளுக்கு தென்பெண்ணை ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு செல்லப்படும்.  தி.மு.க. கூட்டணி ஒரு சந்தர்ப்பவாதக் கூட்டணி. இந்த தேர்தலுடன் தி.மு.க.வின் சகாப்தம் முடிவடைந்துவிடும்.  தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மாநிலத் திட்டங்களை அறிவித்துள்ளனர்.   நான் முதல்வராக இருக்கும் போது அவர்கள் எப்படி அந்த திட்டங்களைச் செயல்படுத்த முடியும்.   இது ஓர் ஏமாற்று வேலை.
 தேர்தல் முடிந்தவு டன் தி.மு.க.  தடை பெற்றுள்ள ஏழை குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்.  இந்த தேர்தலின் மூலம் மக்கள் சந்தர்ப்பவாதக் கூட்டணிக்கு தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும்.  ஒசூரில் ரூ.100 கோடியில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம், ரூ.90 கோடியில் ஊரகப் பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டம், கெலவரப்பள்ளி அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து ஒசூர் ராமநாயக்கன் ஏரியில் தண்ணீர் நிரப்பப்படும் என்றார்.  
பிரசாரத்தின்போது, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி,  மத்திகிரி முன்னாள் நகர்மன்றத் தலைவர் வாசுதேவன்,  ஒசூர் நகரச் செயலாளர் நாராயணன்,  மாவட்ட பொருளாளர் நாராயணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com