சுடச்சுட

  

  வெளி மாவட்டத்தினர் இன்று மாலைக்குள் வெளியேற வேண்டும்

  By DIN  |   Published on : 16th April 2019 09:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேர்தல்  பிரசாரம் நிறைவுற்ற  பிறகு வெளி ஆள்கள் தொகுதிகளில் தங்கக் கூடாது என மாவட்ட தேர்தல் அலுவலர் சு.மலர்விழி தெரிவித்தார்.
  தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர்  பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. தருமபுரி மக்களவைத் தொகுதி பொதுத்தேர்தல் பார்வையாளர் தேபேந்திரகுமார் ஜெனா முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான சு.மலர்விழி பேசியது:  தருமபுரி மக்களவைத் தேர்தல்,  பாப்பிரெட்டிப்பட்டி,  அரூர் (தனி) சட்டப் பேரவைத் தொகுதிகளின் இடைத்தேர்தல் வாக்குப் பதிவு ஏப்.18-இல் நடைபெறுகிறது. அன்று வேட்பாளர்கள் வாக்குச்சாவடிக்கு 200 மீட்டருக்குள் பந்தல் அமைக்கக் கூடாது. அதில் ஒரு டேபிள் மற்றும் இரண்டு சேர்கள் மட்டுமே இருக்க வேண்டும். மேலும் 3-க்கு 4 அடி அளவுள்ள ஒரு விளம்பரத் தட்டி மட்டுமே வைக்க வேண்டும். வாக்காளர்களுக்கான சீட்டை வழங்க வேண்டுமெனில் அதில் வேட்பாளர் பெயர், கட்சி மற்றும் சின்னம்  இல்லாமல் வழங்கலாம். சாப்பிடும் பொருள்கள் எதையும் விநியோகிக்கக் கூடாது. மேலும், ஏப்.16 அன்று மாலை 6 மணிக்கு மேல் வேட்பாளர்களோ அல்லது அரசியல் கட்சிகளோ தேர்தல் பிரசாரம், ஊர்வலம், பொதுக்கூட்டம் ஆகியவற்றை நடத்தக் கூடாது. அதே போல தொலைக்காட்சி மூலமாகவோ திரையரங்கு மூலமாகவோ, சமூக வலைதளங்கள் மூலமாகவோ தேர்தல் தொடர்பான செய்தி, படங்களை வெளியிடக் கூடாது. மேலும் தேர்தல் தொடர்பாக இசை நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் வாயிலாகவோ பொது மக்களை ஈர்க்கும் எந்தவித நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்வதோ, நடத்துவதோ கூடாது. அவ்வாறு விதிமீறல் ஏதேனும் செய்யப்பட்டால் அபராதம் மற்றும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது மேற்கண்ட இரண்டும் சேர்த்து வழங்கப்படும். மேலும், பிரசாரம் நிறைவு பெற்ற பிறகு தொகுதிக்குள்பட்ட நபர்கள் தவிர வேறு வெளிஆள்கள் எவரும் தங்க அனுமதிக்கப்பட மாட்டாது.  அதேபோல, முகவர்கள், வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் தேர்தல் நடத்தை விதிகளை உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என்றார்.
  இக்கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ப.ராஜன், அரூர் (தனி) தேர்தல் நடத்தும் அலுவலர் புண்ணியக்கோட்டி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசில் கட்சிகளின் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
  கிருஷ்ணகிரியில்...
  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்தலை அமைதியாக நடத்தும்  வகையில், வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்  ஏப்.16-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்குள் வெளியேற வேண்டும் என தேர்தல் நடத்தும் அலுவலர் சு.பிரபாகர் தெரிவித்துள்ளார்.
  இதுகுறித்து, அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி மக்களவைத் தேர்தல், ஒசூர் சட்டப் பேரவை இடைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு, ஏப்.18-ஆம் தேதி நடைபெறுகிறது. அதனையொட்டி, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவின் கீழ் தேர்தலுக்கான அனைத்து பரப்புரைகளும்  ஏப்.16-ஆம் தேதி மாலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது. 
  வாக்குப் பதிவு நாளன்று கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியைப் பார்வையிட விரும்பும் வேட்பாளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் உரிய நேரத்தில் மனு செய்ய வேண்டும். ஒசூர் சட்டப் பேரவை இடைத் தேர்தல் வேட்பாளர்கள், உரிய நேரத்தில் ஒசூர் தேர்தல் நடத்தும் அலுவலரான வருவாய் கோட்டாட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
  ஒவ்வொரு வேட்பாளருக்கும் அவரது விண்ணப்பத்தின் அடிப்படையில் அதிகபட்சம் மூன்று வாகனங்கள்  விதிமுறைகளுக்கு உள்பட்டு அனுமதிக்கப்படும்.  
  இந்த வாகனத்தில் ஓட்டுநர் உள்பட 5 நபர்கள் மட்டுமே பயணம் செய்யலாம். இந்த வாகனங்களை எந்தவித தேர்தல் பரப்புரைக்காகவோ அல்லது வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்துச் செல்வதற்கோ பயன்படுத்தக் கூடாது.  
  ஏப்.16-ஆம் தேதி, மாலை 6 மணி முதல் தேர்தல் வாக்குப் பதிவு முடிவடையும் வரை எந்த ஒரு நபரும், தேர்தல் தொடர்பாக  பொதுக் கூட்டம், ஊர்வலம் முதலியவற்றை நடத்துதல், பங்கு கொள்ளுதல் கூடாது. அத்துடன் மேற்குறிப்பிட்ட கால அளவிற்குள் தேர்தல் தொடர்பான எந்தவொரு செய்தியையும் (திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் எந்தக் காட்சி ஊடகத்திலும்) காட்சிப்படுத்தக் கூடாது. கலை நிகழ்ச்சிகள், பொதுபோக்கு நிகழ்ச்சிகள் ஆகியவற்றையும் மேற்குறிப்பிட்டுள்ள காலத்துக்குள் நடத்தத் தடை செய்யப்பட்டுள்ளது.  தடையை மீறும் நபர்கள் மீது தேர்தல் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-இன் கீழ் இரண்டாண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டையும் பெறும் தண்டனைக்குரிய குற்றத்தை செய்தவர்கள் என கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
  மேலும்,  வாக்காளர்களாக இல்லாத எவரும் ஏப்.16-ஆம் தேதி மாலை 6 மணிக்குள் அந்த தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். தற்காலிக தேர்தல் பிரசார சாவடிகளை அமைக்கும் வேட்பாளர்கள் உரிய அனுமதி பெற்று அமைக்க வேண்டும். வாக்குச் சாவடியில் இருந்து 200 மீட்டருக்கு அப்பால் மட்டுமே அமைக்க வேண்டும். இவற்றில் இரு நபர்களுக்கு மேல் எவரும் இருக்கக் கூடாது. இவர்கள் எவ்விதக் குற்ற வழக்குகளும் இல்லாதவர்களாகவும், அந்த வாக்குச் சாவடியின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளவராக இருக்க வேண்டும்.  மேலும், தனது வாக்காளர் அடையாள அட்டையை கண்டிப்பாக  வைத்திருக்க வேண்டும். 
  எனவே, மேலே குறிப்பிட்டுள்ள நெறிமுறைகளை அனைத்து வேட்பாளர்களும், அரசியல் கட்சிகளும் தவறாமல் பின்பற்றி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்தல்களை நடத்த உதவுமாறு  அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai