பென்னாகரம் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

பென்னாகரம் அருகே  நீர்குந்தி பாலையன் குட்டைப் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாலும்,

பென்னாகரம் அருகே  நீர்குந்தி பாலையன் குட்டைப் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாலும், ஒகேனக்கல் கூட்டுக்குடிநீரை முறையாக விநியோகிக்காததைக் கண்டித்தும், பென்னாகரம் பேரூராட்சி அலுவலகத்தைக் காலி குடங்களுடன்  பெண்கள் முற்றுகையிட்டனர்.
பென்னாகரம் பேரூராட்சிக்குள்பட்ட 17 -ஆவது வார்டு நீர்குந்திபாலையன் குட்டைப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு ஆழ்துளைக் கிணறு அமைத்து சிறிய நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டது. இந்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வறட்சி நிலவுவதால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து காணப்படுகிறது. இப்பகுதியில் உள்ள ஆழ்துளைக் கிணற்றில் நீரின் அளவு குறைந்துள்ளது.இப்பகுதியில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலம்  குழாய் அமைத்து தண்ணீர் விநியோகித்து வந்தனர்.கடந்த 4 மாதங்களாக பாலையன்குட்டை பகுதிக்கு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீரும் முறையாக விநியோகிக்கப்படுவதில்லை எனவும், அன்றாட தேவைக்கான குடிநீரை  3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நீர்குந்திப் பகுதிக்குச் சென்று எடுத்து வரும் அவலநிலை உள்ளது. அவ்வாறு தண்ணீர் எடுத்து வந்தாலும்  குடிநீர் தேவையை பூர்த்தி செய்யமுடியவில்லை என இப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். 
இதுகுறித்து, பென்னாகரம் பேருராட்சி அலுவலரிடம் பலமுறை புகார் தெரிவித்தும்  நடவடிக்கை எடுக்காததால், திங்கள்கிழமை காலை 30- க்கும் மேற்பட்ட பெண்கள் காலிகுடங்களுடன் பென்னாகரம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.இதையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர்,  ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் விரைவில் விநியோகிக்கப்படும் என்றும், கூடுதலாக தண்ணீர் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார். இதில் உடன்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com