சுடச்சுட

  

  தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பிரசாரம் ஓய்ந்தது

  By DIN  |   Published on : 17th April 2019 02:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


   தருமபுரியில் மக்களவை பொதுத் தேர்தல் மற்றும் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிகள் இடைத் தேர்தல் இறுதி நாள் பிரசாரம் செவ்வாய்க்கிழமை அமைதியாக நிறைவுற்றது.
  தருமபுரி மக்களவைத் தொகுதியில், அ.தி.மு.க. கூட்டணி சார்பில், பா.ம.க. வேட்பாளர் அன்புமணி ராமதாஸ், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் தி.மு.க. வேட்பாளர் டிஎன்வி எஸ்.செந்தில்குமார், அ.ம.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன்,  நாம் தமிழர் கட்சியின் சார்பில் ருக்மணிதேவி, மக்கள் நீதி மய்யம் சார்பில் டி.ராஜசேகர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட  மொத்தம் 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
  மக்களவைத் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள் வாக்குச் சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டனர். சுயேச்சைகள் குறிப்பிடும்படியாக எங்கும் பிரசாரத்தில் ஈடுபடவில்லை. இதில், பா.ம.க. வேட்பாளர் அன்புமணி ராமதாஸை ஆதரித்து, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ஆகியோரும், தி.மு.க. வேட்பாளர் டிஎன்வி எஸ்.செந்தில்குமாரை ஆதரித்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்,  திரைப்பட நடிகர் உதயநிதி ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மற்றும் நடிகர்கள், இயக்குநர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
  இந்த நிலையில், பிரசாரம் செய்ய இறுதி நாளான செவ்வாய்க்கிழமை (ஏப்.16) பா.ம.க. வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் பாலக்கோட்டில் கூட்டணிக் கட்சியினருடம் ஊர்வலமாக வந்து தனது தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்தார். அதேபோல, தி.மு.க. வேட்பாளர் டிஎன்வி  எஸ்.செந்தில்குமார் தருமபுரி நகரில் கூட்டணிக் கட்சியினருடன் ஊர்வலமாக வந்து தனது பிரசாரத்தை நிறைவு செய்தார். மாவட்டத்தில் அசம்பாவித சம்பவங்களும் ஏதுமின்றி அமைதியாக தேர்தல் பிரசாரம் நிறைவுற்றது.
  கிருஷ்ணகிரியில்...
  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மக்களவைத் தேர்தல்,  ஒசூர் சட்டப் பேரவைத் தொகுதி  இடைத் தேர்தலுக்கான பிரசாரம், செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியுடன் ஓய்ந்தது
  கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.பி.முனுசாமி, தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் அ.செல்லகுமார், அ.ம.மு.க. வேட்பாளர் கணேச குமார், சுயேச்சைகள் என மொத்தம் 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
  அதேபோல்,  ஒசூர் சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் ஜோதி பாலகிருஷ்ணா ரெட்டி,  தி.மு.க. சார்பில் சத்யா,  அ.ம.மு.க. சார்பில் புகழேந்தி, சுயேச்சைகள் என மொத்தம் 9 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
  இவர்கள், தங்களது வாக்குறுதிகளை கூறி, தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர். அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து,  முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர். தி.மு.க.கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.  கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல்,  வேட்பாளர்கள், அவர்களின் ஆதரவாளர்கள் தொடர்ந்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
  இந்த நிலையில், தேர்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை ( ஏப்.16) மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் அமைதியாகவே நடைபெற்றது. தேர்தல் பிரசாரத்தின் போது, வேட்பாளர்கள், தொண்டர்கள் அனைவரும் தேர்தல் ஆணையத்துக்கு முழு ஒத்துழைப்பு அளித்தனர். போலீஸார்  பாதுகாப்புப் பணியில்
  ஈடுபட்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai