வாக்களிக்க மறுப்பு தெரிவித்து போராட்டம்: கிராம மக்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

போச்சம்பள்ளி அருகே 14 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், திம்மிநாயகம் பட்டி ஏரிக்கு தண்ணீர் விடாததைக் கண்டித்து தேர்தலில் வாக்களிக்க


போச்சம்பள்ளி அருகே 14 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், திம்மிநாயகம் பட்டி ஏரிக்கு தண்ணீர் விடாததைக் கண்டித்து தேர்தலில் வாக்களிக்க மறுப்புத் தெரிவித்து கருப்புக் கொடி கட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
போச்சம்பள்ளி அடுத்த குள்ளம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட  14 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், குள்ளம்பட்டி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகே கடந்த வாரம் திடீரென ஒன்று கூடி குள்ளம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட திம்ம நாயக்கன்பட்டி ஏரிக்கு  தண்ணீர் விட எந்த அரசியல் கட்சித் தலைவர்களும் முயற்சி எடுக்கவில்லை எனக் கூறி தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதனையடுத்து செவ்வாய்க்கிழமை பர்கூர் சட்டப்பேரவைத் தொகுதி அலுவலர் ஜி.அமீர்பாஷா தலைமையில், போச்சம்பள்ளி வட்டாட்சியர் எம்.கோபிநாத், வருவாய் ஆய்வாளர் செல்வராஜ், கிராம நிர்வாக அலுவலர் குமார், மத்தூர் காவல் ஆய்வாளர் பால்பாண்டி  ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் 14 கிராமங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். இதில் உதவித் தேர்தல் நடத்தும் அதிகாரி,  வாக்களிப்பது ஜனநாயகக் கடமை. அதனால் அனைத்து குடிமக்களும் கட்டாயம் வாக்கினைப் பதிவு செய்ய வேண்டும்.  இப்பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டுவர கால்வாய் நீட்டிப்பு மற்றும்  குழாய் அமைக்க வேண்டிய ஏற்பாடுகள் குறித்து முறையாக  ஆட்சியரிடம் மனு அளிக்க வேண்டும் என்றார்.  இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த கிராம மக்கள் மற்றும் விவசாயிகள், எங்கள் பிரச்னைகளை தீர்க்க  முழு ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே வாக்களிப்பதாக தெரிவித்தனர். பின்னர் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததையடுத்து அங்கிருந்து அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். 
தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு நாள்களே உள்ள நிலையில் பொதுமக்கள் வாக்களிக்க மறுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com