கிருஷ்ணகிரி, ஒசூரில் கோடை கால பயிற்சி முகாம் தொடக்கம்
By DIN | Published On : 27th April 2019 05:09 AM | Last Updated : 27th April 2019 05:09 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி, ஒசூர் ஆகிய இடங்களில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கோடை கால பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஒசூர் ஆகிய கல்வி மாவட்டங்களில் பள்ளி மாணவ, மாணவியருக்கான கோடை கால பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானம், ஒசூரில் அந்திவாடி விளையாட்டு மைதானம் ஆகிய இடங்களில் நடைபெறும் இந்த கோடை கால பயிற்சி முகாமில் 6, 7 மற்றும் 8-ஆம் வகுப்புகளில் ஏற்கெனவே நடத்தப்பட்ட உலகத் திறனாய்வு தடகளப் போட்டிகளில் முதல் 10 இடங்களைப் பெற்ற மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரியில் தொடங்கிய முகாமை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் எஸ்.சிவரஞ்சன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இந்த முகாமை விளையாட்டுப் பயிற்சியாளர்கள், உடல் பயிற்சி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் ஒருங்கிணைக்கின்றனர்.