குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம்
By DIN | Published On : 04th August 2019 05:09 AM | Last Updated : 04th August 2019 05:09 AM | அ+அ அ- |

குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் கிருஷ்ணகிரியில் சனிக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் துறை, மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்டக் குழந்தைகள் நலக் குழுமம் ஆகியன இணைந்து நடத்திய இந்த ஊர்லவம் கிருஷ்ணகிரி புறநகர் பேருந்து நிலையம் அருகே தொடங்கியது. கிருஷ்ணகிரி துணை காவல் கண்காணிப்பாளர்கள் ஆசைதம்பி, பாஸ்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்டக் குழந்தைகள் நல அலுவலர் சரவணன், குழந்தைகள் நலக் குழுமத் தலைவர் வின்சென்ட் சுந்தராஜ், நகர காவல் ஆய்வாளர் (பொ) கணேஷ்குமார் மற்றும் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
குழந்தைகள் வருமானம் பெற்றோருக்கு அவமானம், குழந்தையை சட்டப்படி தத்தெடுப்போம், குழந்தைகளை பாதுகாப்போம், வளமான சமுதாயத்தை உருவாக்குவோம், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுப்போம் என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஊர்வலத்தில் பங்கேற்றோர் ஏந்திச் சென்றனர். பெங்களூரு சாலை வழியாகச் சென்ற ஊர்வலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி அருகே நிறைவு பெற்றது.
ஒசூரில்...
ஒசூர் தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள டி.எஸ்.பி. அலுவலகத்தில் பேரணியை டி.எஸ்.பி. மீனாட்சி கொடியசைத்து தொடக்கி வைத்தார். இதில் ஒசூர் எம்.ஜி.ஆர். கல்லூரி மற்றும் மகரிஷி மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர்.
பேரணியின் போது, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியவாறும், முழக்கமிட்டவாறும் மாணவ, மாணவியர் சென்றனர். நகரின் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்ற இப்பேரணி, காமராஜ் காலனியில் உள்ள ஆர்.வி. அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் முடிவடைந்தது. இதில் ஒசூர் உள்கோட்ட காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.